
தெலுக் இந்தான்,ஆக09:
தெலுக் இந்தான் வட்டாரத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஆலங்களில் ஒன்றான ஜாலாம் சங்காட் ஜோங்,2வது மைல் ரெட்னியு தோட்டத்தின் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் இடம் மாற்றம் காணாது.இவ்வாலயம் இதே இடத்தில் அதன் சமயப்பணியை தொடரும் என பேரா மாநில ஆட்சிகுழு உறுப்பினர் அ.சிவநேசன் உறுதி அளித்தார்.
நடப்பு அரசாங்கம் இருக்கும் வரை பேரா மாநிலத்தில் எந்தவொரு ஆலயமும் அகற்றப்படாது என்னும் உத்தரவாதத்தை கொடுத்த ஆட்சிகுழு உறுப்பினர் இம்மாநிலத்தில் செயல்படும் ஆலயங்கள் அதனை முறையாக பதிவு செய்திருக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
மேலும்,ஆலயங்கள் சமய செயல்பாடுகளிலும் சமூகச் சேவைகளிலும் சிறப்பாக இயங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்ட அவர் ஒருசில ஆலயங்களில் செவ்வாய்,வெள்ளிக்கிழமைகளில் கூட பக்தர்களை காண முடியாதது வருத்தம் அளிப்பதாக் கூறினார்.
அதுமட்டுமின்றி,பேரா மாநிலத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட ஆலயங்கள் இருப்பதாகவும் கூறினார். அதேவேளையில்,அவசியமின்றி ஆலயங்களை கட்டும் நடவடிக்கையில் யாரும் ஈடுப்படக்கூடாது.தேவையிருப்பின் முறையான விண்ணப்பத்தோடு அனும்தியோடு அதனை எழுப்புவது சிறப்பானதாகும் என்றார்.
மேலும்,மாநில ஆட்சிகுழு உறுப்பினராய் இம்மாநிலத்தின் இந்தியர் நலனிலும் ஆலயங்களின் நலனிலும் தாம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதோடு தேவைகளையும் அடிப்படை வசதிகளையும் நிறைவாக மேற்கொண்டும் வருவதாக ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய வருடாந்திர திருவிழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் இவ்வாலயம் மிகவும் சிறப்பாக செயல்படுவதாக பாராட்டியதோடு ஆலயத்திற்கு வெ.30ஆயிரம் மானியமாகவும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

