
சுங்கை சிப்புட், ஆக.10: ம இ கா புதிய பரிமாணங்களுடன், புதிய உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறது. மேலும் அதிகமான இளைஞர்களை இந்த கட்சியில் இணைக்க முற்பட வேண்டும் என்று 78 வதுபேராக் ம இ கா பேராளர்கள் மாநாட்டை தொடக்கி வைத்தபோது ம இ கா வின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் கூறினார்.
ம இ கா வின் உறுப்பினர்களுக்கு நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் செயல்படுகிறோம். அதற்கான திட்டங்கள் வரையறுக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
ம இ கா என்பது ஒரு பெரிய குடும்பம். இந்த குடும்பம் பல உறவு முறைகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த கட்சி குடும்ப பாணியில் செயல்பட்டு வருவதால், அனைவரும் நமக்கு முக்கியமானவர்கள். அவர்களில் யாரையும் ஓரங்கட்ட முடியாது. ஆகவே, இக்கட்சியின் சாதாரண உறுப்பினர்கள் இக்கட்சியின் பால் அளவு கடந்த அன்பு வைத்துள்ளீர்கள். அதுபோலதான் கட்சியின் தலைமைத்துவ பீடத்தில் உள்ள நாங்கள் அனைவரும் கட்சியின் மேம்பாட்டிற்கு சேவையாற்றி வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

