சிலிம் வில்லெஜ் ஆலயத்திற்கு வெ.20 ஆயிரம் – நிலவிவகாரத்தை முறையாக மேற்கொள்ள ஆலோசனை!

சிலிம் ரீவர்,ஆக11: சிலிம் வில்லெஜ் ஶ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தின் நில விவகாரத்திற்கு தன்னால் இயன்ற உதவிகளையும் ஆதரவை தாம் வழங்குவேன் என்று கூறிய சுங்கை சட்டமன்ற உறுப்பினரும் பேரா மாநில மனிதவளம்,சுகாதாரம்,ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நலப்பிரிவிற்கான ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு அ.சிவநேசன் கூறினார்.

முன்னதாக ஆலயத்தின் நிலப்பிரச்னை தொடர்பில் ஆலய நிர்வாகத்திடம் கேட்டறிந்த சிவநேசன் இந்நிலம் அரசு நிலமாக இருப்பின் இந்த ஆலயத்திற்கு நிலத்தை பெற்று தருவதில் எந்த சிக்கலும் இருக்காது.எனவே,ஆலய நிர்வாகம் முறையான விண்ணப்பத்தையும் சரியான அணுகுமுறையினையும் இவ்விடயத்தில் கொண்டிருக்க வேண்டும் எனவும் அவர் ஆலோசனை கூறினார்.

பேரா மாநிலத்தில் தனது தலைமைத்துவத்தின் கீழ் நீண்டக்காலமாக நில சிக்கல்களை கொண்டிருந்த எத்தனையோ ஆலயங்களுக்கு தாம் தீர்வு கண்டிருப்பதாகவும்,அவ்வகையில் ஆலய நிர்வாகம் சரியான இலக்கில் இச்சிக்கலை களைய நடவடிக்கை மேற்கொண்டால் விரைவில் நன் தீர்வு காணப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.

முன்னதாக,ஆலய நிர்வாகத்திடம் நிலப்பிரச்னைக்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த சிவநேசனுக்கு அதன் செயலாளர் மா.வினோத்கண்ணா மாவட்ட நில அலுவலகத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் இனி மேற்கொள்ளப்போகும் செயல்பாடுகள் குறித்தும் விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில்,இளைஞர்களால் மிகவும் சிறப்பான முறையில் நடத்தப்பட்டும் வரும் ஆலய நிர்வாகத்தை பாராட்டிய மாண்புமிகு சிவநேசன் ஆலயத்தின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்காக வெ.20 ஆயிரத்தை மானியமாக வழங்குவதாகவும் அறிவித்தார்.

சிலிம் வில்லெஜ் ஶ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தின் ஆடிமாத வருடாந்திர திருவிழாவிற்கு சிறப்பு வருகை அளித்தபோது மாண்புமிகு சிவநேசன் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதற்கிடையில்,மாண்புமிகு அ.சிவநேசனின் சிறப்பு வருகையும் அவரது ஆலோசனைகளும் நீண்டக்காலம் நீடித்து வரும் நிலப்பிரச்னைக்கு தீர்வை எட்டும் என்னும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக ஆலய நிர்வாகம் தெரிவித்ததோடு ஆட்சிகுழு உறுப்பினருக்கு நன்றியையும் தெரிவித்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles