
சென்னை: கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 24,468 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் 1916.41 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்டுள்ள அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் விவசாயத்தை மேம்படுத்தும் வகையிலும், மக்களின் குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், கிடைக்கப் பெறும் நீரை வீணாக்காமல் நீர்நிலைகளில் தேக்கி வைக்கும் பொருட்டும், புதிய நீராதாரங்களை உருவாக்குதல், ஏற்கெனவே உள்ள நீர்நிலைகள் மற்றும் அதன் உட்கட்டமைப்புகளை நல்ல முறையில் பராமரித்தல், பாசனக் கட்டமைப்புகளான அணைகள், அணைக்கட்டுகள், நிலத்தடி தடுப்புச் சுவர்கள், கால்வாய்கள், வாய்க்கால்கள், ஏரிகள் போன்றவற்றை உருவாக்குதல், புனரமைத்தல் மற்றும் பராமரித்தல் போன்ற பல்வேறு முக்கியப் பணிகளை தமிழக நீர்வளத்துறை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர முயற்சிகளின் பயனாக தற்போது அத்திக்கடவு – அவிநாசி திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது

