திருமுறை கண்ட நாள் தலைநகரில் திருநெறிய பரவசம்

தொண்டறத்தைப் போற்றும் சைவத் திருமுறை இன்று நிலைபெற்று இருப்பதற்குக் முதற்காரணம், சோழப் பெருமன்னன் இராஜராஜ சோழனும் திருநாரையூர் கணபதியடியார் நம்பியாண்டார் நம்பியுமே ஆவர்.

இவ்விருவரும், தேவார-திருமுறைப் பாடல்கள் பதிக்கப்பெற்ற ஓலைச்சுவடி-களை தில்லையம்பதிய அந்தணர்களிடம் இருந்து, ஆவணித் திங்கள் 2-ஆம் நாள் பெற்று மீட்ட வரலாற்றின் நினைவாக, மலேசிய இந்து சங்க பெட்டாலிங் ஜெயா வட்டாரப் பேரவையும் பெட்டாலிங் ஜெயா அருள்மிகு சக்தி ஈஸ்வரி ஆலயமும் இணைந்து நேற்று ஆவணி மாத இரண்டாம் நாள்(ஆகஸ்ட்-18) நடத்திய திருமுறை கண்ட நாள் என்னும் நிகழ்ச்சி, மிகச் சிறப்பாக நடைபெற்றது.

சோழப் பெருமன்னனான இராஜ ராஜன், இந்த உலகில் முதன் முதலாக கடற்படையை நிறுவிய ஆட்சியாளர்; மக்களுக்கு வளமான வாழ்வையும் நலமான ஆட்சியையும் அளித்தவர். அதைவிட, சிவநெறிச் சிந்தனையாளருமான அவர், உலகோர் வியக்கும் வண்ணம் மிகப்பெரிய சிவத்தலமான தஞ்சை பெரிய கோயிலையும் கட்டியவர்.

ஆனாலும், அவர் ஆட்சிக் காலத்திற்கு பல நூற்றாண்டுகளுக்குமுன் வாழ்ந்த நாயன்மார் பெருமக்கள் சிவனை ஓதி, பல்லாயிரக் கணக்கில் புனைந்த தமிழ்ப் பாடல்கள் பதிக்கப்பெற்ற ஓலைச் சுவடிகள் கிட்டாமல் தேடிக் கொண்டிருந்தார்.

அந்த வேளையில், விநாயகக் கடவுளின் நேரடி அருள்பெற்றவராக வலம்வந்த நம்பியாண்டார் நம்பியை அணுகிய வேளையில், அசரீரியாக அவர் பெற்ற இறைவாக்கின் துணைகொண்டுதான், சிதம்பர சந்நிதானத்தில் ஓலைச் சுவடிகள் இருப்பதை அறிந்து, அவையும் நாள்தோறும் கரையானுக்கு இரையாக கரைந்து கொண்டிருப்பதையும் ஊகித்து, உடனே அவற்றை மீட்கத் தலைப்பட்டனர் என்பது சிவநெறிசார் வரலாறாக உள்ளது.

அப்படி திருமுறைப் பெட்டகத்தை மீட்ட வரலாறு படைக்கப்பட்ட நாள் ஆவணித் திங்கள் 2-ஆம் நாள்.

அதனடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில், சிறப்பு வருகையாளர்களாக தவத்திரு பாலயோகி சுவாமிகள், மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் சங்கபூஷன் தங்க கணேசன், மலேசிய இந்து சங்க சிலாங்கூர் மாநிலத் தலைவர் தொண்டர்மாமணி மனோகரன், துணைத் தலைவர் தொண்டமணி திருமதி சரஸ்வதி, சிலாங்கூர் மாநில திருமுறை பொறுப்பாளர் டாக்டர் விக்னேஸ்வரன், செர்டாங் வட்டாரப் பேரவைத் தலைவர் சந்துரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மலேசிய சைவ நற்பணிக் கழகத் தலைவர் ‘சிவநெறிச் செம்மல்’ ந.தருமலிங்கம், சிவ சிந்தனையாளர் வரதராஜன் ஆகியோர் ஆவணி 2-ஆம் நாள் சிவசமய வரலாறு குறித்துப் பேசினர். முன்னதாக, பாலயோகி சுவாமிகள் ஆசியுரையும் கணேசன் தங்கவேலு நிறைவுரையும் ஆற்றினர்.

காலை 5:30 மணி அளவில் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், திருமுறை ஓதல், திருமுறை நடனம், திருமுறைப் பெட்டக ஊர்வலம் ஆகியனவும் இடம்பெற்றதாக பெட்டாலிங் ஜெயா வட்டாரப் பேரவைச் செயலர் ப.சோதிராசன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles