100 நாள் 100 கட்டுரை – “மாண்புமிகு நாட்கள்” நூல் வெளியீடு!!

ரவாங்,ஆக20: ஒவ்வொரு விடியலும் நமக்கு எத்தகைய முக்கியமானதோ,அதுபோல் உலகின் ஒவ்வொரு உன்னத நாளையும் அதன் மாண்பையும் நாம் அறிந்து வைத்திருப்பதும் மிகவும் அவசியமானது.அதனை உணர்த்தும் வகையில் உலக தினங்களின் நாட்குறிப்பு போல் “மாண்புமிகு நாட்கள்” என்னும் நூலை நமக்கு அளித்துள்ளார் எழுத்தாளர் ஆரோக்கிய மேரி சிமியோன் அவர்கள்.

இந்நூல் வெளியீடு அன்மையில் ரவாங்கில் வெளியீடு கண்டது.ரவாங் ஶ்ரீ காரிங் இடைநிலைப்பள்ளியின் முன்னாள் ஆசிரியருமான ஆரோக்கிய மேரி சிமியோன் உலகில் கொண்டாடப்படும் பல்வேறு நாட்களில் இருந்து 100 நாட்களைப் பற்றிய 100 கட்டுரைகளை நனிச் சிறந்த முறையில் பதிவு செய்துள்ளார்.

வழக்கமாக நாம் அறிந்திருக்கும் கொண்டாட்டங்களின் உன்னதம்,அதன் தொன்மை,வரலாறு என பல்வேறு விடயங்களை இந்நூல் பேசி செல்கிறது.இந்நூல் வெறுமனே கட்டுரை நூல் என்று சொல்வதை காட்டிலும் இதுவொரு தகவல் சேமிப்பு நூல் எனலாம்.

மேலும்,இந்நிகழ்வில் நூலாசிரியரின் கணவர் முனைவர் வி.அருள்நாதன் வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து, தன்முனைப்புப் பேச்சாளரும், சூப்பர் மைண்ட் டைனமிக்கின் ஒருங்கிணைப்பாளருமான ஆசிரியர் மு. கணேசன் அவர்கள் சிறப்புரை வழங்கினார். அவர் தம் உரையில் வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார். துவான்கு பைனுன் ஆசிரியர் கல்விக் கழக விரிவுரையாளரும், மலேசியத் தமிழ் மொழிப் பயிற்றியல் கழகத்தின் தலைவருமான திரு. மணிமாறன் கோவிந்தசாமி அவர்கள் நூலாய்வு செய்தார். அவர் தம் உரையில், நூலாசிரியர் இந்த நூலில் அடங்கியுள்ள அனைத்து நாட்களும் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு, திகதி, தோற்றுவிக்கப்பட்டதற்கான காரணங்கள் ஆகியவை பற்றி மிகத் தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதியுள்ளார் என்றார்.

அதுமட்டுமின்றி, இந்நூல் மிக எளிமையான முறையில், எளிய நடையில், நல்ல தமிழில், சிறுவர் முதல் பெரியவர் வரை இந்த நூலை வாசிக்கும் பொழுது சுலபமாகப் புரிந்துக் கொள்ளும் வகையிலும் எழுதியுள்ளது சிறப்பு எனவும் எடுத்துரைத்தார். மேலும், இதைப் படிக்கும் வாசகர்கள் குறிப்பாகப் பள்ளி மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இந்த நூல் இருக்கும். இந்தச் சிறப்பு தினங்களைக் கொண்டாடுவதற்கான பெருமையை அனைவரும் அறிந்து கொள்ள இந்த நூல் வாய்ப்பை அளிக்கின்றது என்றும் கூறினார். அதன் பிறகு, நூலாசிரியர் அறிமுக உரையை ஆசிரியர் திரு. ஜோசுவா ராஜ் நிகழ்த்தினார்.

தொடர்ந்து, ஏற்புரையை வழங்கினார் நூலாசிரியர் திருமதி ஆரோக்கிய மேரி சிமியோன். ‘மாண்புமிகு நாட்கள்’ எனும் தன்னுடைய நூல், இவ்வுலகில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் அல்லது அனுசரிக்கப்படும் நூறு சிறப்பு நாட்களைப் பற்றியது. அந்நாட்களின் வரலாறு, குறிக்கோள், நோக்கம், கருப்பொருள் போன்றவற்றை எடுத்துரைக்கின்றது. இந்நூல் ஒரு பொது அறிவுப் பொக்கிஷம் ஆகும். இந்நூலை மாணவர்களும் பொதுமக்களும் வாசித்துத் தங்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ள உதவும் என்பதால் இந்நூலை வாங்கிப் பயன் பெறுமாறு நூல் ஆசிரியர் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சிக்கு நூலாசிரியரின் உறவினர்களும்,ரவாங் வட்டார ஆசிரியர்களும்,நண்பர்களும்,முன்னாள் மாணவர்களும்,பொது மக்களும் கலந்து சிறப்பித்த நிலையில் நூலை அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்து முதல் நூலை நூலாசிரியரின் சகோதரர் அந்தோணிசாமி பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நூலை வாங்கி பயன்பெற நினைக்கும் வாசகர்கள் 012-6933981 என்னும் எண்ணில் தொடர்புக்கொள்ளலாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles