
புதுடில்லி, ஆக. 26 – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அண்மைய புதுடில்லி பயணத்தைத் தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் வாயிலாக தங்கள் பொருளாதார உறவை மேம்படுத்த மலேசியாவும் இந்தியாவும் விருப்பம் கொண்டுள்ளன.
டிஜிட்டல் பொருளாதாரம், செமிகண்டக்டர் உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு, உள்கட்டமைப்பு, உணவு பாதுகாப்பு மற்றும் சுற்றுலா போன்ற பல துறைகளில் அணுக்கமான ஒத்துழைப்பை நல்குவது குறித்து இருதரப்பு சந்திப்பின் போது பிரதமர் அன்வாரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் விவாதித்தனர்.
முக்கியத் தூண்களாக விளங்கும் இவை அனைத்தையும் உள்ளடக்குவதற்கு எங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை இன்னும் விரிவான அளவுக்கு உயர்த்துவோம் என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் கூறினார் .
கடந்த 2011 ஆம் ஆண்டு கையெழுத்தான வர்த்தகம் மற்றும் முதலீட்டை உள்ளடக்கிய மலேசியா-இந்தியா விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் மேலும் மேம்படுத்தப்படும் என்று பெர்னாமாவுக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.
Bernama

