

செ.வே.முத்தமிழ்மன்னன்
கோலாலம்பூர், ஆக. 26-
ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் மண் அமிழ்வில் சிக்கி காணாமல் போன இந்திய மாது விஜயலட்சுமி குடும்பத்திற்கு உதவிகளை வழங்க பினாங்கு இந்து அறப்பணி வாரியம் தயாராக இருப்பதாக அதன் தலைவர் ஆர்.எஸ். ராயர் இன்று அறிவித்தார்.
இன்று காலையில் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவுக்கு ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ராயர், பினாங்கு பாகான் டாலம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் மற்றும் ஜசெக செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் ஆகியோர் வருகை புரிந்தனர்.
விஜயலட்சுமி தேடும் மீட்பு பணி குறித்து அவர்கள் அதிகாரிகளிடம் விளக்கம் பெற்றனர்.
பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்
விஜயலட்சுமி கணவர் மாதவன் மற்றும் புதல்வர் ஆகியோர் கதறி அழும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பார்த்து மிகவும் வேதனை அடைந்தோம் என்று அவர் சொன்னார்.
உண்மையிலேயே இது ஒரு மிகப் பெரிய துயரமான சம்பவம். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.
விஜயலட்சுமி குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர பினாங்கு இந்து அறப்பணி வாரியம் தயாராக உள்ளது என்று அவர் சொன்னார்.

