
ஷா ஆலம், செப் 8-
சிலாங்கூர் மாநில அரசின் பள்ளி பேருந்து கட்டண உதவித் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள 99 தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த 3,426 வசதி குறைந்த மாணவர்களுக்கு 10 லட்சத்து 27 ஆயிரத்து 800 வெள்ளி வழங்கப்பட்டது.
இவ்வாண்டு ஏப்ரல் மாதம் உலு சிலாங்கூரில் நடைபெற்ற முதல் கட்ட நிதியளிப்பு நிகழ்வின் போது பத்து பள்ளிகளைச் சேர்ந்த 334 மாணவர்களுக்கு 1 லட்சத்து 200 வெள்ளி உதவித் தொகையாக வழங்கப்பட்ட வேளையில் இன்றைய இரண்டாம் கட்ட நிதியளிப்பு நிகழ்வில் 89 பள்ளிகளில் பயிலும் 3,092 மாணவர்களுக்கு 927,600 வெள்ளி மாணவர்களுக்கு நிதி பகிர்ந்தளிக்க பட்டதாக மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பா ராய்டு கூறினார்.
சுங்கை ரெங்கம் தமிழ்ப் பள்ளியின் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற பள்ளிப் பேருந்து கட்டணம் வழங்கும் மற்றும் ஓய்வு தமிழாசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்வுக்கு தலைமை தாங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
முறையான போக்குவரத்து வசதி இல்லாத மற்றும் பள்ளியில் இருந்து அதிக தொலைவில் வசிக்கும் தோட்டப்புற மக்கள் மட்டுமின்றி ஏழ்மை நிலையில் உள்ள நகர்ப்புற பெற்றோர்களையும் இலக்காக கொண்டு இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
ஆண்டுக்கு 300 வெள்ளியை வழங்கும் இந்த பள்ளி பேருந்து கட்டண உதவித் திட்டத்தை கடந்த 2014ஆம் ஆண்டு முதல் மாநில அரசு அமல்படுத்தி வருகிறது. மாதம் 2,000 வெள்ளிக்கும் குறைவான வருமானம் பெறும் பி40 தரப்பினருக்கு உதவுவதை இந்திட்டம் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார் அவர்.
இத்தகைய உதவித் திட்டங்களை அமல்படுத்துவதில் முழு ஒத்துழைப்பு வழங்கி வரும் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.
இந்த மானியத் தொகை கிடைத்த மூன்று நாட்களுக்குள் அதனை சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் படி அனைத்து பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் மேலாளர் வாரியத்தை தாம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்லி யூசுப், பத்து தீகா சட்டமன்ற உறுப்பினர் டேனியல் அல்-ரஷிட் ஹருண் அமினுள் ரஷிட், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்,பாட ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்