
ஷா ஆலம், செப். 8- இந்நாட்டில் தமிழுக்காகவும் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்காகவும் அளப்பரிய பங்கு ஆற்றிய தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஐவருக்கு சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் நல்லாசிரியர் விருது வழங்கப் பட்டது.
கிள்ளான் ஹைலண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப் பள்ளியில் பணியாற்றிய டாக்டர் வேலாயுதம் த/பெ பொன்னையா, பேராக் ரிவர் வேலி தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பணியாற்றிய ஹரிஹரன் த/பெ கித்தப்பன், ரவாங் தமிழ்ப்பள்ளியில் பணியாற்றிய டாக்டர் ராஜேஸ்வரி த/பெ ஆறுமுகம், ரவாங் தமிழ்ப் பள்ளியில் பணியாற்றிய கஞ்சினமலை த/பெ கோவிந்தசாமி, கோலக் கிள்ளான், ஜாலான் வாட்சன் தமிழ் பள்ளியில் பணியாற்றிய திருமதி இந்திராணி த/பெ வெள்ளையன் ஆகியோரே விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட அந்த ஐந்து தலைமை ஆசிரியர்கள் ஆவர்.
இங்குள்ள சுங்கை ரெங்கம் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாநாட்டு மையத்தில் மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு தலைமையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் அவர்கள் பொன்னாடை போர்த்தி, மாலை அணிவிக்கப் பட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப் பட்டனர்.