கோலாலம்பூர், செப். 11- ஜாலான் மஸ்ஜிட் இந்தியா பகுதியும் அங்குள்ள
கட்டிடங்களும் பொது மக்களுக்குப் பாதுகாப்பானவையே என்பதை மண் அமிழ்வு சம்பவம் தொடர்பான சிறப்பு பணிக்குழு
கூட்டத்தில் உறுதிப் படுத்தப்பட்டதாக கோலாலம்பூர் மாநகர் மன்றம்
கூறியது.
அந்த சாலையில் ஏற்பட்ட மண் உள்வாங்கிய சம்பவம் ஒரு தனிப்பட்ட
நிகழ்வு என்பதை பல்வேறு அரசு நிறுவனங்கள் முன்வைத்த
அறிக்கைகளின் வழி தெரிய வந்துள்ளதாக மாநகர் மன்றம் அறிக்கை
ஒன்றில் தெரிவித்தது.
தற்போதுள்ள புவியியல் தகவல் மற்றும் மண் ஆய்வு பதிவுகளின் படி
மண் அமிழ்வு நிகழ்ந்த இடம் கென்னி ஹில்ஸ் உருவாக்கத்தில்
அமைந்துள்ளது.
பொதுவாகக் கூறினால், அது ஷிஸ், ஃபிலிட், குவார்ஸிட்
கல் அடுக்குகளால் உருவானது என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் திட்ட மேலாண்மை நிர்வாக இயக்குநர்
முகமது ஹமிம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு
அரசு துறைகளின் பிரதிநிதிகள் இந்த சம்பவம் தொடர்பான தங்களின்
அறிக்கைகளைத் தாக்கல் செய்தனர்.
பொதுப்பணி இலாகா, கனிமவளம் மற்றும் புவிஅறிவியல் இலாகா, அரச
மலேசிய போலீஸ் படை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இண்டா
வாட்டர் குழுமம் ஆகியவை உள்ளிட்ட துறைகள் தங்களின்
அறிக்கைகளைத் தாக்கல் செய்தன.
மேலும் மலேசிய நில அளவை மற்றும் வரைபட இலாகா, மலேசிய
பொறியாளர் சங்கம், மலேசிய புவிதொழில்நுட்ப அமைப்பு ஆகியவை
அறிக்கை தாக்கல் செய்த பிற துறைகளில் இதில் அடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெர்னாமா