

பத்துமலை, செப் 17-
பொருளாதாரத்தோடு, கலை மற்றும் பண்பாடு ஆகியவற்றையும் மேம்படுத்தும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் தூரநோக்கு, மலேசிய இந்து சங்கத்தின் 46-ஆவது திருமுறைப் போட்டியில் பலமான எதிரொலியை ஏற்படுத்தியது.
இந்தப் போட்டி பிரதமரின் சிறப்புப் பணிகளுக்கான அதிகாரி சண்முகம் மூக்கன் ஆதரவில் நடத்தப்பட்டது.
இதற்கு முன்னதாக ஜனவரி தொடங்கி ஒவ்வொரு மாநிலத்திற்கும், தேசிய நிலையிலான இந்தப் போட்டிக்கும் தனித்தனியாக நிதி வழங்கப்பட்டது.
இந்திய பண்பாட்டு வளர்ச்சிக்காகவும் இந்தப் போட்டிக்காகவும் பிரதமரின் சார்பாக திரு. சண்முகம் மூக்கன் மொத்தம் RM230,000 வழங்கியிருக்கிறார்.
இந்தப் போட்டி ஜொகூர், மலாக்கா, கெடா, கிளந்தான், பினாங்கு, நெகிரி செம்பிலான், சிலாங்கூர், பேராக், கோலாலம்பூர் மற்றும் பகாங் ஆகிய 10 மாநிலங்களை உள்ளடக்கி நடத்தப்பட்ட நிலையில், இறுதிப் போட்டி பத்துமலையில் நடத்தப்பட்டது.
திருமுறைகளை இளையோர்களுக்குக் கொண்டு சேர்க்கவும் நமது பாரம்பரியத்தின் வேர்களை ஆழமாக அவர்களின் மனதில் பதிய வைக்கவும் இந்த நிகழ்வு அடித்தளமாக அமைக்கப்பட்டது.
2023-ஆம் ஆண்டு புத்ராஜெயா பண்பாட்டு விழாவில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் பொருளாதார மேம்பாட்டோடு கலை மற்றும் பண்பாட்டு வளர்ச்சியும் மிகவும் அவசியம் என வலியுறுத்தி இருந்தார்.
பிரதமரின் அந்த அறைகூவலை நடைமுறை படுத்தும் விதமாக இந்தப் போட்டிக்கு அதரவளித்து இளையோர்களுக்குத் திருமுறைகளைக் கொண்டு சேர்க்கவும் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தவும் சண்முகம் மூக்கன் உதவியிருக்கிறார்.
சண்முகம் மூக்கன் தமது உரையில் இளையோரின் திறமையையும் ஈடுபாட்டையும் கண்டு வியப்பதாகத் தெரிவித்தார்;
இன்று நம் பிள்ளைகள் வெளிப்படுத்தி இருந்த திறமைகளையும் அவர்களின் ஆழ்ந்த ஈடுபாட்டையும் கண்டு நான் வியக்கிறேன்.
நமது திருமுறைகளை அழிந்துவிடாமல் காக்கவல்ல அவர்களின் இந்தத் திறமை என் நெஞ்சை நெகிழ வைக்கிறது.
இந்தத் திருமுறை வெறும் பண்பாட்டு வழித்தடம் மட்டும் அன்று, மாறாக நமது பழங்காலச் சின்னங்களையும் பெருமைகளையும் எதிர்காலத்திலும் இளையோர் மத்தியில் நிலைநிறுத்தும் ஒரு பாலமாகும்.
இந்தப் பழம்பெரும் பண்பாட்டை என்றென்றும் நிலைத்திருக்கச் செய்யும் இத்தகைய நிகழ்விற்கு ஆதரவளிப்பதில் நான் எல்லையில்லா ஆனந்தமும் பெருமையும் கொள்கிறேன் என்று சொன்னார்.

