
சென்னை: செப் 17-
ஆயிரமாண்டு மடமையைப் பொசுக்கிய அவரது அறிவுத்தீதான், நமது பாதைக்கான வெளிச்சம் என தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“புரட்டுக் கதைகளுக்கும் – வறட்டு வாதங்களுக்கும் வளைந்து கொடுக்காதீர்கள். எல்லாவற்றுக்கும் மேலானது சுயமரியாதை என இனமான உணர்வூட்டி நிமிர்நடை போட வைத்த பகுத்தறிவுப் பகலவனுக்குப் புரட்சி வணக்கம் என்று அவர் சொன்னார்.
இன்று உலகம் முழுவதும் தமிழர் உயர்ந்த நிலைகளில் இருப்பதற்கு, தந்தை பெரியாரின் சிந்தனையும் உழைப்புமே அடித்தளம்!
ஆயிரமாண்டு மடமையைப் பொசுக்கிய அவரது அறிவுத்தீதான், நமது பாதைக்கான வெளிச்சம்! அந்த வெளிச்சத்தில் சமத்துவ உலகத்தை நிறுவுவதே நமது தலையாய பணி” என தெரிவித்துள்ளார்.
தாழ்த்தப்பட்டவர்கள் கல்வி கற்க தடை, கோவிலில் நுழைய தடை, காலில் செருப்பு அணிய தடை போன்ற அனைத்து தடைகளையும் உடைத்தெறிய கடுமையாக போராடிய பெரியாரை, அவரது 146வது பிறந்த தினமான இன்று நினைவுகூர்வோம்.
சமூக நீதியைக் காக்கவும், சாதி வேற்றுமையைக் களையவும் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட அவரின் பிறந்த தினத்தைத் தமிழக அரசு கடந்த வாரம் சமூக நீதி நாளாகக் கொண்டாடியது என்று அவர் சொன்னார்.

