
பத்து காஜா,செப்29: மலேசியாவின் வளமான மேம்பாட்டிற்கும் மேன்மைமிகு எதிர்காலத்திற்கும் கல்வியே உந்துசக்தி.
ஒருநாட்டின் கல்வி மேம்பாடும் தரமும் அதுசார்ந்த முன்னேற்றமும் நம்பிக்கையான நாட்டின் எதிர்காலத்திற்கான உத்தரவாதம் என்றும் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு வ.சிவகுமார் நினைவுறுத்தினார்.
அவ்வகையில்,கல்வி மற்றும் கல்வி சார்ந்த முதலீடு அதுநோக்கிய தூரநோக்கு சிந்தனை செயல்பாடு விவேகமான வியூகம் என்றும் அவர் மேலும் கூறினார்.
எனவே,கல்வி சார்ந்த முன்னெடுப்புகளில் தனியார் மற்றும் பொது முதலீடுகளை அதிகரிக்கும் செயல்வடிவம் அவசியமென்றும் அதனை வரவேற்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்கும் கல்வியாளர் நிறைந்த சமூகத்தை உருவாக்கவும் கல்வியே ஆகச் சிறந்த மூலதனம் என்பதையும் சுட்டிக்காண்பித்த சிவகுமார் கல்வி சார்ந்த முதலீடு அரசாங்கம் சார்ந்து மட்டுமே இருக்ககூடாது,மாறாக தனியார் உட்பட அனைத்து தரப்பிடமிருந்தும் அது வெளிப்பட வேண்டும் என்றார்.
கல்வி சார்ந்த ஒவ்வொரு முதலீடும் நாளைய தலைமுறையை மட்டும் உருவாக்காது.மாறாய்,உலகளாவிய நிலையில் தரமான சவால்களை எதிர்கொள்ளவும் நாட்டை தனித்துவமான நம்பிக்கையோடு பயணிக்க வைக்கவும் அது வழிசெய்யும் என்றும் மேலும் நினைவுறுத்தினார்.
தொடர்ந்து பேசுகையில் அவர் உலகளாவிய நிலையிலான கல்வி சவால்களை எதிர்கொள்ளவும் தரமான கல்வி சார்ந்த முதலீடுகளில் கவனம் செலுத்தி நாட்டின் கல்வி தரத்தை தொழில்நுட்பம்,புத்தாக்கம் உட்பட நடப்பியல் சூழல் என அனைத்திலும் மேம்பாடும் வளமான இலக்கையும் எட்டுதல் வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அதேவேளையில்,இதுநாள் வரை கல்வி மற்றும் உயர்க்கல்விக்காக அரசாங்கம் ஒதுக்கி வந்த அதிகமான மானியம் மற்றும் தொழில்திறன் கல்விக்கான முதலீடு ஆகியவற்றைப் பாராட்டிய அவர் பிடிபிடிஎன்,பிடிபிகே மற்றும் பொது உபகாரச் சம்பளம் போன்ற கல்வி உதவி திட்டங்களையும் பாராட்டினார்.மேலும்,இத்திட்டங்கள் மேலும் வலுவடையவும் இன்னும் அது பெரும் அளவில் விரிவடையவும் தனியார் துறைகளின் ஒத்துழைப்பும் ஆதரவும் அவசியமென்றார்.
அதுமட்டுமின்றி,பி40 எனப்படும் ஏழ்மைநிலை சமூகத்தின் மீதும் நம் கவனம் திரும்ப வேண்டும் எனவும் அவர்கள் சார்ந்த பிள்ளைகளின் கல்வி நிலையும் எதிர்காலம் சிறந்த இலக்கை எட்ட அரசாங்கம் மேற்கொள்ளும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளோடு தனியார் துறைகளும் கைகோர்த்து அச்சமூகம் கல்வியில் சிறந்த இலக்கை எட்ட பெரும் பங்காற்ற வேண்டும் என்றார்.
குறிப்பாக அம்மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் அதன் உட்க்ட்டமைப்போடு வசதிகளும் தேவைகளும் இருப்பதோடு நவீன தொழில்நுட்பம் சார்ந்த அத்தியாவசியமும் இருப்பதை உறுதி செய்ய தனியார்துறை முன் வரவேண்டும் சிவகுமார் கோரிக்கை விடுத்தார்.
மேலும்,உள்ளூர் ஆற்றல் நிறைந்த கல்வியல் நிலையால் திறனான கல்வியாளர்களை உருவாக்க முடியும்.இந்நிலை அதன் இலக்கை எட்டினால் வெளிநாடு தொழிலாளர்களை நம்பியிருக்கும் நிலை உருவாகாது என்றும் நினைவுறுத்திய மாண்புமிகு நாட்டின் சிறந்த பொருளாதார மேம்பாட்டிற்கும் உயர்விற்கும் அது வித்திடும் என்றார்.
அதுமட்டுமின்றி,நாட்டின் கல்வி உயர்விற்கும் கல்வி சார்ந்த மேம்பாடு வளமான எதிர்காலத்திற்கு அரசு,தனியார் துறை உட்பட அனைத்து நிலையிலானவர்களும் ஒரே இலக்கோடு ஒன்றுப்பட்டு செயலாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட அவர் மலேசியா கல்வி சார்ந்த முதலீட்டில் துணிந்து களமிறங்க வேண்டும் என்றார்.கல்வி சார்ந்த முதலீடு பன்மடங்கு லாபத்தை வழங்க கூடிய நம்பிக்கையான முதலீடு என்றும் அவர் புலப்படுத்தினார்.
இறுதியாய்,ஒவ்வொரு இளம்தலைமுறையும் இவ்விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான ஆற்றல்மிகுந்த செயல்பாட்டை கொண்டிருக்க வேண்டும்.நாம் அனைவரும் ஒன்றுப்பட்டு மலேசியாவை சிறந்த இலக்கிற்கும் சவால்மிகுந்த வளமிக்க நாடாகவும் உருவாக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

