
காளிதாஸ் சுப்ரமணியம்
ரவாங்: அக் 9-
தற்போது பெய்து வரும் அடை மழையால் குவாங் கம்போங் பூங்கா ராயா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மோசமான வெள்ளத்தால் தற்போது 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று சிலாங்கூர் மாநில மஇகா தலைவர் டத்தோ சங்கர் ஐயங்கார் கூறினார்.
கம்போங் பூங்கா ராயா குடியிருப்பு அருகே ஆறு உள்ளது. மழை காலங்களில் ஆற்று நீர் அதிகரிப்பதால் இப் பகுதியில் வெள்ளப் பிரச்சினை அடிக்கடி ஏற்படுகிறது.
இம்முறை மோசமான பாதிப்பை இப்பகுதி மக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
60 குடும்பங்களில் கிட்டத்தட்ட 40 வீடுகளில் அனைத்து பொருட்களும் சேதமடைந்து உள்ளது.
பாதிக்கப்பட்ட இம்மக்களின் பிரச்சினை செலயாங் தொகுதி தலைவர் சிவஞானம் வாயிலாக என் பார்வைக்கு கொண்டு வரப்பட்டது என்று அவர் சொன்னார்.
மஇகா சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மெத்தையும் கேஸ் அடுப்பும் அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டது.
அதே வேளையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் குறிப்பாக நட்மாவின் வாயிலாக உதவிகள் பெற்று தருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று டத்தோ சங்கர் ஐயங்கார் தெரிவித்தார்.
மக்கள் கஷ்டப்படும் நேரத்தில் உதவும் ஒரு கட்சியாக மஇகா இன்னமும் விளங்குகிறது என்று அவர் சொன்னார்.

