
கோலாலம்பூர்: அக் 11-
நாட்டின் பாரம்பரிய மூத்த அரசியல் கட்சியான மஇகாவின் 78ஆவது தேசியப் பேராளர் மாநாடு அண்மையில் நடைபெற்றதன் தொடர்பில் கட்சியின் முக்கியமான பொறுப்புகளுக்கு தேர்தல்வழி தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கட்டொழுங்கிற்கும் சீரான செயல்பாட்டிற்கும் பெயர்பெற்ற மஇகா-வில் அனைத்து நடவடிக்கைகளும் செம்மையாக நடைபெற்று முடிந்த நிலையில், தற்பொழுது நியமனப் பொறுப்பாளர்களும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர் என்பதை மலேசிய இந்திய சமுதாயத்திற்கும் கட்சியினருக்கும் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மஇகா தேசியப் பொருளாளராக இதுவரை கடமையாற்றி வந்த டான்ஸ்ரீ இராமசாமி, தேசிய உதவித் தலைவராக நியமிக்கப்படுகிறார்.
மஇகா தேசிய பொதுச் செயலாளராக டத்தோ ஆனந்தனும் நிருவாகச் செயலராக டத்தோ டாக்டர் ஏ.டி.கே. ராஜாவும் ஏற்கெனவே மத்திய செயலவையில் நியமிக்கப்பட்டனர். இவ்விரு பதவிகளும் மறு உறுதி செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ள தேசியத் தலைவர்,
தேசியப் பொருளராக டத்தோ ந.சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சியின் தேசிய தகவல் பிரிவிற்கு டத்தோ ஏ.கே. இராமலிங்கமும் காலம்கருதி புதிதாக கட்டமைக்கப்பட்ட மஇகா தேசிய ஊடகப் பிரிவிற்கு எல். சிவசுப்பிரமணியமும் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
மஇகா கட்டடக் குழுத் தலைவராக டத்தோ என்.ரவிச்சந்திரன் நியமனம் பெற்றுள்ள வேளையில், தகவல் பிரிவிற்கு இதுவரை பொறுப்பேற்றிருந்த டத்தோ இரா.தினாளன் கட்சியின் தேசிய வியூக அதிகாரியாகவும் அமைப்புச் செயலாளராக டத்தோ ந.முனியாண்டியும் நியமிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.