கல்வி,சுகாதாரம் மற்றும் தற்காப்பு ஆகிய துறைகளில் அரசு கவனம் – சிவகுமார் தகவல்!!

கோலாலம்பூர்,அக்19: பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று தாக்கல் செய்த 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நாட்டின் மிக முக்கியமான மூன்று துறைகளில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதை நன்கு உணர முடிவதாக பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு வ.சிவகுமார் குறிப்பிட்டார்.

நாட்டின் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் பெரும் பங்காற்றக்கூடிய கல்வி,சுகாதாரம் மற்றும் தற்காப்பு ஆகிய மூன்று துறைகளும் நாட்டின் வளர்ச்சியோடு மக்களின் வாழ்வாதார மேம்பாடு,நலவாழ்வு உட்பட நம்பிக்கையான பாதுகாப்பு மிக்க எதிர்காலத்தை மையப்படுத்தியதாக அமைந்திருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

மேலும்,2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கடந்தாண்டை காட்டிலும் அதிகரித்துள்ளது.2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வெ.393.8 பில்லியனாக இருந்த வேளையில் 2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீடு வெ.422 பில்லியனாகும் என்றார்.

கடந்த 2024ஆம் ஆண்டுக்கான இயக்கச் செலவினங்களுக்கு வெ.303. பில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தது.வரும் 2025ஆம் ஆண்டுக்கு அது வெ.336 பில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில் வெ.90 பில்லியனாக 2024ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட மேம்பாடு வளர்ச்சிக்கான ஒதுக்கீடு 2025க்கு வெ.86 பில்லியனாக குறைக்கப்பட்டுள்ளது என்பதையும் சிவகுமார் சுட்டிக்காண்பித்தார்.

முன்னதாக கல்விக்கு வெ.64.1 பில்லியன்,சுகாதாரத்திற்கு வெ.45.3 பில்லியன் மற்றும் தாற்காப்பு அல்லது பாதுகாப்பிற்கு வெ.21.2 பில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பது கடந்தாண்டை போலவே சீரான ஒன்றாகவே அமைந்துள்ளது எனலாம்.அதுமட்டுமின்றி,கல்வி,சுகாதாரம் போன்ற அத்தியாவசிய சேவைகளை வலுப்படுத்துவதில் அரசாங்கத்தின் கவனத்தையும் அக்கறையையும் இது பிரதிபலிப்பதாகவும் சிவகுமார் பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அதேவேளையில்,தேசிய பாதுகாப்புக்கு நிறைவான ஒதுக்கீடு செய்யப்பட்டிருபதையும் அரசு உறுதி செய்துள்ளது என்றார்.இந்த ஒதுக்கீடு வளர்ந்து வரும் நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்வதையும் மாறும் உலகளாவிய சூழலின் சவால்களுக்கு ஏற்ப உருமாற்றம் செய்வதையும் நோக்கமாக இது கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

மேலும்,2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மலேசியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் இந்த நனிச் சிறந்த வியூக ஒதுக்கீடு எவ்வாறு பங்களிப்பும் அதீத ஆளுமையையும் கொண்டிருக்கும் என்பதை அறிய ஆவலாகவே உள்ளது என்றும் அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles