தமிழ் இலக்கியத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் நனிச் சிறந்தது – மாண்புமிகு சிவகுமார் தகவல்!!

ஈப்போ,அக்19: தமிழ் மொழி,தமிழ் இலக்கியங்கள் காலத்தால் அழியாதவைகள்.அதனை பேணி காப்பதும்,வலுவான மொழி ஆளுமைகளை மீட்டெடுப்பதும் காலத்தின் அவசியம் என்றும் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு வ.சிவகுமார் தெரிவித்தார்.

மேலும்,மொழியோடு நமது பண்பாடு,பாரம்பரியம் ஆகியவற்றையும் வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் ஆக்கப்பூர்வமாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.

நமது மொழியும் பாரம்பரியமும் பண்பாடும் தொன்மையானது.அது உலகின் முதன்மையானது என்பதைக் கருத்தில் கொண்டு, மலேசியாவில் தமிழ் இலக்கியத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

மேலும்,இலக்கியக் கலை என்பது படைப்பு மற்றும் அசாதாரணமான திறமைகளைக் கொண்டவர்களுக்கு சொந்தமான ஒன்றாகும்.பலர் இந்த துறையில் உண்மையிலேயே நிபுணர்களாக இல்லை. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக செழித்து வளர்ந்த தமிழ் இலக்கியம் மலேசியாவில் தொடர்ந்து செழித்தும் வளமான இலக்கை நோக்கியும் செழித்தோங்கி வருகிறது என்றார். இருப்பினும், இந்தத் துறையில் புத்துயிர் பெற அதிக முயற்சிகள் தேவை என்பதையும் அவர் நினைவுறுத்தினார்.

அவ்வகையில்,மலேசியாவில் தமிழ் இலக்கியத்திற்காக நீண்டகாலமாகப் போராடிவரும் பேரா ஈப்போவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளருமான எம்.ஏ.அலியின் தொடர் முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.

அண்மையில்,பேரா மாநிலத் தமிழ் இலக்கிய மேம்பாட்டுச் சங்கத்தின் 12வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நல்லெண்ண விருந்தை எம்.ஏ.அலி ஏற்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், மலேசியாவில் தமிழ் இலக்கியம் மற்றும் மொழியின் மாண்பை உயர்த்துவதில் இந்த நிகழ்வு முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் கூறியதோடு அச்சங்கத்தின் தொடர் முயற்சிகளுக்காகவும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்காகவும் மாண்புமிகு சிவகுமார் வெ.10ஆயிரத்தை மானியமாக வழங்கினார்.

நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் சுமார் 300 தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்ட வேளையில் இலக்கியம், மொழி மற்றும் பண்பாட்டுத் துறையில் தொடர்ந்து தீவிரமாகப் பங்காற்றி வரும் 12 தமிழ் ஆர்வலர்களுக்கு அவர்களின் சேவைகளைப் பாராட்டி அங்கீகரிக்கும் விதமாக ‘செந்தமிழ்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த நிகழ்வு பல்வேறு உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் தலைவர்களிடமிருந்து வலுவான ஆதரவைப் பெற்றது. தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தை வலுப்படுத்தும் முயற்சிகளில் இளைய தலைமுறையினரை ஈடுபடுத்த அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சிவகுமார் அச்சங்கத்தை கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையில்,சங்கத்தின் செயல் நடவடிக்கைக்காக மானியம் வழங்கி ஊக்குவித்த மாண்புமிகு வ.சிவகுமாருக்கு அச்சங்கத்தின் தலைவர் எம்.ஏ.அலி நன்றி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles