பத்துகாஜா,அக்23: பத்துகாஜா வாழ் மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதில் அதன் நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் பெரும் இலக்கு கொண்டிருப்பதாகவும் அத்தகைய ஆக்கப்பூர்வமான பணியினை திறன்பட மேற்கொண்டும் வருவதாக குறிப்பிட்டார்.மக்களின் தேவைகளை கணடறியவும் அவர்களின் எதிர்பார்ப்புகளை செவிமடுக்கவும் மக்களை நேரிடையாக சந்திக்கவும் ஒவ்வொரு வாரமும் தாம் களமிறங்குவதாகவும் அவர் மேலும் கூறினார்.
மக்களை சந்திக்க ஒவ்வொரு வாரமும் களமிறங்குவது மக்களின் சிக்கல்களை நமக்கு அடையாளம் காட்டுவதோடு மட்டுமின்றி மக்களின் உணர்வுகளையும் அது நமக்கு படம் பிடித்து காட்டுவதாக கூறினார்.தனது அரசியல் பயணத்தில் மக்கள் பிரதிநிதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் எதிர்கட்சி,ஆளும் கட்சி என்ற நிலையை கடந்து மக்களின் பிரச்னைகளை நேரடியாக களம் கண்டு அவர்களோடு கலந்துரையாடி அவர்களின் தேவைகளையும் எதிர்நோக்கும் சிக்கல்களையும் கண்டறிவது தனது பெரும் கடமைகளில் ஒன்று என்றார்.
நேற்று முன் தினம் தனது உதவியாளர்களுடன் இங்குள்ள கம்போங் மெர்பாவ் பொது மண்டபத்தை பார்வையிட வந்த போது சிவகுமார் இவ்வாறு குறிப்பிட்டார்.சம்மதப்பட்ட மண்டபம் நீண்டக்காலமாக மக்களின் பயன்பாட்டில் இல்லை என்றும்,சீரமைக்கப்படாமலும் இருந்து வந்ததையும் நினைவுக்கூர்ந்த சிவகுமார் விரைவில் அந்த மண்டபம் புதிய பொழிவையும் உருமாற்றத்தையும் காணும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி,சம்மதப்பட்ட மண்டபத்தின் அருகிலுள்ள கால்வாயின் ஒருபகுதி உடைந்து அதனால் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் குறித்தும் ஆய்வு செய்த சிவகுமார் கிராமத்து தலைவர் திரு.சுஹாய்மி முன் வைத்த பிரச்னைகளுக்கும் தீர்வு காண தாம் நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
மேலும்,நடப்புச் சூழலில் வானிலையை அவ்வளவு துள்ளியமாய் கணிக்க முடியாத சூழல் இருப்பதால் வெள்ளம் இனி வருங்காலத்தில் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியமென்றார்.
மேலும்,மண்டபத்தை சீரமைக்கவும்,புதிய தோற்றம் அளிக்கவும் மட்டுமின்றி வெள்ளம் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் பத்துகாஜா நாடாளுமன்ற சேவை மையம் அதற்கான ஒரு பெரும் நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் உறுதி அளித்த சிவகுமார் மக்கள் பிரச்னைகளுக்கு ஆக்கப்பூர்வமான தீர்வை ஏற்படுத்தும் அதேவேளையில்,அது தற்காலிக தீர்வாக இல்லாமல்,நிரந்திர தீர்வாக இருப்பதையே தாம் தொடர்ந்து உறுதி செய்தும் வருவதாக சிவகுமார் குறிப்பிட்டார்.
அதேவேளையில்,மக்களை நேரடிய சென்று காண்பதும்,பிரச்னைகள் உள்ள இடங்களை நேரிடையாக பார்வையிடுவதும் பிரச்னைகளை தீர்க்க வழிசெய்வதோடு மக்கள் பிரதிநிதிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான குழப்பத்தை தீர்ப்பதோடு இடைவெளியையை குறைத்து இருதரப்பின் மத்தியிலும் நல்ல நட்ப்புறவையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மக்களின் பிரதிநிதியாகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தாம் தொடர்ந்து மக்களின் சமூக நலன் காக்கவே திறன்பட சேவையாற்றி வருவதாகவும் அவர் இச்சந்திப்பின் போது நினைவுறுத்தினார்.
இதற்கிடையில்,மாண்புமிகு சிவகுமாரின் அணுகுமுறை,செயல்பாடு,மக்களை சந்திக்கும் பண்பு ஆகியவற்றோடு மக்கள் பிரச்னைகளுக்கு அவர் மேற்கொள்ளும் தீர்வுகள் தொகுதி மக்களிடையே நன்மதிப்பையும் வரவேற்ப்பையும் பெற்றிருப்பதாக கிராமத்து தலைவரும் பொது மக்களும் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.