
பலாக்கோங் , அக்.24- சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் தீபாவளி ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள் பலாக்கோங் வாழ் இந்தியர்களுக்கு நேற்று வழங்கப்பட்டன4
பலாக்கோங் ஏயோன் பேரங்காடியில் நடைபெற்ற தீபாவளி ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் வெய்ன் ஓங் சுன் வெய் கலந்து கொண்டார்.
200 வெள்ளி மதிப்புள்ள இந்த பற்றுச் சீட்டுகளைப் பெறுவதற்காக மக்கள் காலை மணி 9.00 முதல் இந்தப் பேரங்காடியில் கூடத் தொடங்கிவிட்டனர்.
வரிசைக்கிரமமாக நின்று தங்களின் பற்றுச் சீட்டுகளைப் பெற்றுக் கொண்ட இவர்கள் பின்னர் பேரங்காடியில் பொருட்களை வாங்கத் தொடங்கினர். அத்தியாவசிய பொருட்களோடு தீபாவளி பலகார பொருட்களை வாங்குவதற்கும் இந்தப் பற்றுச் சீட்டுகளை இவர்கள் பயன்படுத்தினர்.
தங்களின் நிதி சுமையைக் குறைப்பதற்காக மாநில அரசாங்கம் வழங்கியிருக்கும் இந்த பற்றுச் சீட்டுகள் இத்தருணத்தில் தங்களுக்கு பேருதவியாக இருந்தது குறித்து அவர்கள் மனநிறைவு தெரிவித்தனர்.
இந்த இலவச பற்றுச் சீட்டுத் திட்டத்தின் வழி தங்களின் பொருளாதார சுமையை குறைப்பதற்கு உதவிய மாநில அரசாங்கத்திற்கும் தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கும் அவர்கள் தங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

