

காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் அக் 26-
மலேசிய தமிழ் பத்திரிகைகளில் பணியாற்றி வரும் பத்திரிகையாளர்களின் நலன்கள் காக்க தொடங்கப்பட்ட மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்திற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று 50,000 வெள்ளி மானியம் வழங்கி பேருதவி புரிந்துள்ளார்.
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று தலைநகரில் மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தீபாவளி விருந்து நிகழ்ச்சி மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, மித்ரா தலைவர் பிரபாகரன், ம இகா தேசிய உதவித் தலைவர் டத்தோ நெல்சன், சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு, புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ், உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்யா பிரகாஷ் மற்றும் பிரதமரின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்த விழாவில் சண்முகம் மூக்கனுக்கு சங்கத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
இந்த விழாவில் உரையாற்றிய சண்முகம் மூக்கன், இந்திய சமுதாயத்தின் நலன்கள் மீது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிக அக்கறை கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.
இனம் நிறம் பாராமல் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அனைத்து இன மக்களுக்கும் சேவையாற்றி வருகிறார் என்று அவர் சொன்னார்.
மேலும் மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் வளர்ச்சிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 50,000 மானியம் வழங்கினார்.
இதற்கான காசோலையை மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் செயலவை உறுப்பினர்களிடம் சண்முகம் மூக்கன் நேரடியாக ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

