புதுடெல்லி: நவ 3- காலிஸ்தான் தீவிரவாதி கொலையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து கனடா அமைச்சர் கூறிய குற்றச்சாட்டு மிகவும் அபத்தமானது,ஆதாரமற்றது என கூறியுள்ள இந்தியா, இது இரு நாட்டு உறவில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இந்தியாவுக்கான கனடா நாட்டு தூதரை நேரில் அழைத்து கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த விவகாரத்தில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார்.
ஆனால் அதற்கான ஆதாரங்களை கனடா அரசு தரவில்லை என குற்றச்சாட்டை இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது.
இதனால் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கனடாவில் இருந்து இந்திய தூதர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளனர்.
அதே போல இந்தியாவில் உள்ள கனடா தூதரக உயர் அதிகாரிகளை அந்நாடு திரும்ப பெற்றுள்ளது.