
ஈப்போ, நவ.18: வரும் சனிக்கிழமை 23 இல், பேராக் ஈப்போ இந்திரா மூலியா அரங்கத்தில் மாலை மணி 3.00 க்கு 2024 ஆண்டுக்கான பேராக் மாநில தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பை பேராக் மாநில அரசாங்கம் ஏற்று நடத்தவுள்ளதாக இந்திய சமூகநலத்துறை, சுகாதாரம், ஒற்றுமை, சுகாதாரம் ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.
இந்நிகழ்வில் முதன்மை மற்றும் முக்கிய பிரமுகராக பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா தம்பதியினர், ராஜா மூடா தம்பதியினர், ராஜா டி ஹீலிர் தம்பதியினர் மற்றும் அரச குடும்பத்தை சார்ந்தவர்களும் கலந்துக் கொள்கிறார்கள்.
இவர்களுடன் பேராக் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரனி முகமட் தம்பதியினர், பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுடன், 24 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துக் கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வில், விருந்தோம்பல் முடிந்தவுடன் ஆதரவற்ற சிறார்களுக்கு அன்பளிப்பு நடவடிக்கைகளை சுல்தான் தம்பதியினர் மேற்கொள்வார்கள் என்று அவர் தெரிவித்தார்.
இம்முறை சீனியற்ற தீபாவளி திறந்த இல்ல உபசரணைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, தேநீர் மற்றும் சீராப் பானங்களில் சீனி இருக்காது. அத்துடன், எண்ணெய் வகையான உணவுகளும் ஓரங்கட்டப்படும். சீனி பொதுமக்களின் தேவைக்கு வைக்கப்பட்டிருக்கும். அவர்களின் தேவைக்கு ஏற்ப சீனியை பயன்படுத்தும்படி அவர் அறிவுறுத்தினார்.

