ஆலயங்களுக்கு வழங்கப்படும் சிலாங்கூர் மாநில அரசின் மானியத்திற்கு வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை- பாப்பாராய்டு விளக்கம்!

ஷா ஆலம், நவ 20 – இந்து ஆலயங்களுக்கு வழங்கப்படும் சிலாங்கூர் மாநில அரசின்
மானியத்திற்கு வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை என மாநில
சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மாறாக, ஆலயங்களின் பரப்பளவு, மறுசீரமைப்பு மற்றும் பராமரிப்பு,
சம்பந்தப்பட்ட ஆலயங்களின் நிதி நிலை மற்றும் ஆலயத்திற்கு வரும்
பக்தர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு
மானியத் தொகையின் அளவு நிர்ணயிக்கப்படுவதாக மனித வளம் மற்றும்
வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் சுங்கை ராமால் தொகுதி பெரிக்கத்தான்
நேஷனல் உறுப்பினர் முகமது ஷாபி நகா எழுப்பிய கேள்விக்கு
பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்து ஆலயங்களுக்கு மாநில அரசு எத்தகைய உதவிகளை வழங்கி
வருகிறது? எந்த வகையில் உதவிகள் வழங்கப்படுகின்றன? மற்றும்
ரொக்க உதவியாக இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு ஆலயத்திற்கும்
வழங்கப்படும் தொகை எவ்வளவு? என்று முகமது ஷாபி
கேள்வியெழுப்பியிருந்தார்.

இக்கேள்விகளுக்கு பதிலளித்த பாப்பராய்டு, லீமாஸ் என அழைக்கப்படும்
பௌத்த, கிருஸ்துவ, இந்து, சீக்கிய மற்றும் தாவ் சமயங்களுக்கான சிறப்பு
செயல்குழுவின் ஆலோசனையின் வாயிலாக இந்து ஆலயங்கள் மற்றும்
இஸ்லாம் அல்லாத இதர வழிபாட்டுத் தலங்களுக்கு மானியம்
வழங்கப்படுவதாக விவரித்தார்.

வழிபாட்டுத் தலங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதை
நோக்காக கொண்ட இந்த லீமாஸ் சிறப்பு செயல்குழு, நில மற்றும்
கனிவள இலாகா, நில மற்றும் மாவட்ட அலுவலகம் மற்றும், ஊராட்சி
மன்றங்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

ஆலயங்களை சீரமைப்பது, உடைக்கப்பட்ட ஆலயங்களை மாற்று
இடங்களில் நிறுவுவது, சமயக் கல்வி மற்றும் சமய உள்ளிட்ட
நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான உபகரணங்களை
வாங்குவது ஆகிய நோக்கங்களுக்காக இந்த மானியம் வழங்கப்படுகிறது
என்று தெளிவுபடுத்தினார்

ஆலயங்களுக்கான மானியம் காசோலைகளாகவும் மின்-பணப்பரிமாற்றம்
வாயிலாகவும் சம்பந்தப்பட்ட ஆலய நிர்வாகங்களின் வங்கி கணக்குகளில்
சேர்க்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles