
புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ள டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீது மக்கள் வெறுப்பை தூண்டும் வகையில் மேற்கொள்ளப்படும் விஷம பிரச்சாரங்கள் குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மக்களிடையே சமய நல்லிணக்கத்தை சீர்குழைக்கும் வகையில் இணையத்தில் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு எதிராக போலிசாரும் சட்டத்துறை தலைவரும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோலசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சூல்கிப்லி கேட்டுக் கொண்டுள்ளார்.
பொதுத்தேர்தலில் தோற்றவர்கள் தினம்தோறும் பல்வேறு அவதூறுகளை இணையத்தில் பரப்பி வருகின்றனர்.
மக்களுக்கான 500 ரிங்கிட் உதவித் தொகையை பிரதமர் அறிவித்திருப்பது, தொடர்ந்து 3 மாதங்களுக்கு வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களுக்கு 300 ரிங்கிட் வழங்கப்படுகிறது என பல்வேறு பொய்யான வதந்திகளை சம்பந்தப்பட்ட தரப்பு பரப்பி வருவதாக அவர் சொன்னார்.
இதுபோன்ற வாக்குறுதிகள் வழங்கப்படவில்லை.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீது மக்கள் வெறுப்படைய வேண்டும் என்ற கெட்ட நோக்கத்தில் சில தரப்பினர் இதுபோன்ற பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர் என்று அவர் சொன்னார்.

