சுற்றுச்சூழல் பாதுகாப்பும் விழிப்புணர்வும் அவசியமானது – மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர்!

கம்பார், டிச11:
சுற்றுச் சூழலை பாதுகாப்பதும் அது குறித்த ஆக்கப்பூர்வமான விழிப்புணர்வை கொண்டிருப்பதும் இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானதாய் அமைந்திருப்பதாக மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் பவானி நினைவுறுத்தினார்.

மறுசுழற்சி பொருட்கள்,பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் மற்றும் மின்னியல் குப்பைகள் என அனைத்தும் முறையாக கையாள்வதும் அதனை சரியான முறையில் சேகரித்து மறுசுழற்சிக்கு வித்திடுவதும் இன்றைய தேவைகளில் ஒன்றாக அமைந்திருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

கம்பார் வட்டார நிலையில் நடைபெற்ற மறுசுழற்சி குப்பைகள்,பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் சேகரிப்பு,மின்னியல் குப்பைகள் சேகரிப்பு போட்டியை நிறைவு செய்து வைக்கையில் சட்டமன்ற உறுப்பினர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மாநில அரசாங்கம் இத்திட்டத்திற்காக ஒவ்வொரு ஊராட்சி மன்றத்திற்கும் நிதி ஒதுக்கியுள்ள நிலையில் கம்பார் ஊராட்சி மன்றம் அதனை செழிமையுற கையாண்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் நாம் வாழும் சூழலை தூய்மையாகவும் ஆரோக்கியம் மிக்கதாகவும் வைத்திருப்பதை இத்திட்டம் உறுதி செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும்,மக்களிடையே ஏற்படும் விழிப்புணர்வு சிந்தனை தான் சிறந்த சுற்றுச்சூழலுக்கு வித்திடும்.நெகிழி பயன்பாட்டை குறைத்தல்,குப்பைகளை தனித்துவமாய் பிரித்து மக்கும் குப்பை,மக்கா குப்பை,மின்னியல் குப்பைகள்,மறுசுழற்சி குப்பைகள் என வகைப்படுத்துதலில் பொது மக்கள் பெரும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அதேவேளையில், ஊராட்சி மன்றம் முன்னெடுக்கும் இதுபோன்ற துரித நடவடிக்கைகளுக்கு பொது மக்களும் பொது அமைப்புகளும் அரசு சார்ந்த,சாராத இலாகாவும் கைகோர்த்து களமிறங்க வேண்டும் எனவும் அவர் மேலும் நினைவுறுத்தினார்.

சுமார் ஒருமாத காலம் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதோடு தொடர்ந்து இந்த ஆக்கப்பூர்வமான பணியினை ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும் எனவும் பவானி கேட்டு கொண்டார்.

கம்பார் நகர் உட்பட அதன் ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட பகுதிகள் தூய்மையாகவும் ஆரோக்கியமான சூழலிலும் இருப்பதை உறுதி செய்ய ஊராட்சி மன்றம் முன்னெடுக்குக் செயல்பாடுகளுக்கு நாம் அனைவரும் கரம்கோர்ப்போம் எனவும் அவர் நினைவுறித்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles