பிரேசில் அணி திரில் வெற்றி! வெளியேறியது ஜப்பான்

ஹூஸ்டன்: ஜூன் 30-
உலகக் கிண்ண கால்பந்து ‘ரவுண்டு-32’ போட்டியின் ‘கூடுதல் நேரத்தில் கேப்ரியல் மார்டினெல்லி ஒரு கோல் அடித்து கைகொடுக்க பிரேசில் அணி 2-1 என, ‘திரில்’ வெற்றி பெற்றது.
ஜப்பான் அணி பரிதாபமாக வெளியேறியது.

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடந்த உலகக் கிண்ண கால்பந்து தொடருக்கான ‘ரவுண்டு-32’ போட்டியில், உலகின் ‘நம்பர்-5’ பிரேசில் அணி, 17ஆவது இடத்தில் உள்ள ஜப்பான் அணியை எதிர்கொண்டது.

பிரேசில் வீரர் நெய்மர் களமிறங்கவில்லை.

ஆட்டத்தின் 29ஆவது நிமிடத்தில் ஜப்பான் அணிக்கு கைஷு சானோ ஒரு கோல் அடித்தார். பின், 35ஆவது நிமிடத்தில் பிரேசிலின் வினிசியஸ் ஜூனியர் ‘பாஸ்’ செய்த பந்தில் சகவீரர் லுாகாஸ் பாகுயட்டா கோல் அடிக்க முயற்சித்தார்.

ஆனால் ஜப்பான் அணியினர் பந்தை தடுத்தனர். பிரேசில் அணியினர் நீண்ட நேரம் பந்தை தங்கள் வசம் வைத்திருந்த போதும் கோல் அடிக்க முடியாமல் தடுமாறினர்.

முதல் பாதி முடிவில் ஜப்பான் அணி 1-0 என முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியின் 56ஆவது நிமிடத்தில் கேப்ரியல் துாக்கி அடித்த பந்தை பிரேசிலின் கேஸ்மிரோ தலையால் முட்டி ஒரு கோல் அடித்தார்.

பின், 58ஆவது நிமிடத்தில் வினிசியஸ் ஜூனியர் அடித்த பந்தை ஜப்பான் கோல்கீப்பர் ஜியான் சுசூகி தடுக்க முயன்றார். ஆனால் பந்து அவரது கையில் பட்டுச்சென்று ‘கோல்போஸ்டில்’ மோதியதால், வினிசியசின் கோல் வாய்ப்பு நழுவியது.

‘கூடுதல் நேரத்தில் (90+2ஆவது நிமிடம்) காயமடைந்த கேஸ்மிரோ வெளியேறினார். பின், 90+5ஆவது நிமிடத்தில் புருனோ குய்மரேஸ் ‘பாஸ்’ செய்த பந்தில் பிரேசிலின் கேப்ரியல் மார்டினெல்லி ஒரு கோல் அடித்து கைகொடுத்தார்.

ஆட்டநேர முடிவில் பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, ‘ரவுண்டு-16’ போட்டிக்கு முன்னேறியது.

வரும் ஜூலை 5 ஆம் தேதி ஐவரி கோஸ்ட் அல்லது நார்வே அணியை பிரேசில் சந்திக்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles