




ஆயர் தாவார், ஜூன் 30 –
மாணவர்களின் அறிவாற்றல், திட்டமிடும் திறன், தலைமைப் பண்புகள் ஆகியவற்றை வளர்க்கும் நோக்கில் ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளி நடத்திய பேராக் மாநில அளவிலான டத்தோ ஙே கூ ஹாம் கிண்ணம் – சக்கரவியூகம் 2.0 சதுரங்கப் போட்டி வெகு சிறப்பாக நடந்தேறியது.
இப்போட்டியின் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஙே கூ ஹாம், சதுரங்கம் வெற்றியை நோக்கிய விளையாட்டு மட்டுமல்ல; பொறுமை, பகுத்தறிவு, முன்னோக்கிச் சிந்தனை மற்றும் சரியான முடிவெடுக்கும் திறனை வளர்க்கும் அறிவுப் பயிற்சி என தமது சிறப்புரையில் குறிப்பிட்டார்.
மேலும் ஒவ்வொரு போட்டியும் மாணவர்களின் அனுபவத்தையும் ஆளுமையையும் செம்மைப்படுத்தும் வாய்ப்பாக அமைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக இந்நிகழ்ச்சியில் தலைமையுரையாற்றிய ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் சுப்பிரமணியம் ரெங்கசாமி, மாணவர்கள் மின்னணு சாதனங்களில் செலவிடும் நேரத்தை அறிவை வளர்க்கும் பயனுள்ள செயல்பாடுகளுக்கு மாற்ற வேண்டும் என்றார்.
பேராக் மாநில அளவில் நடத்தப்பட்ட இப்போட்டியில் 7 மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளி, சீனப்பள்ளி, தேசியப்பள்ளி என 50 பள்ளிகளிலிருந்து மொத்தம் 224 மாணவர்கள் பங்கேற்ற இந்தப் போட்டிக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், அடுத்த ஆண்டு சக்கரவியூகம் 3.0 போட்டி மேலும் விரிவாக நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சிக்கு பங்களித்த ஆதரவாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், பள்ளி நிர்வாகங்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கும் அவர் தம் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
அவரைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய மஞ்சோங் மாவட்ட கல்வி துணை அதிகாரி (மாணவர் மேம்பாட்டுத் துறை) முகமது அடாம் பின் அப்துல் அஸீஸ், மாணவர்களின் முழுமையான வளர்ச்சியில் சதுரங்கம் போன்ற அறிவுப்போட்டிகள் முக்கிய பங்கு வகிப்பதாகவும், இத்தகைய முயற்சிகளுக்கு மாவட்டக் கல்வி அலுவலகம் தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்றும் உறுதியளித்தார்.
போட்டியின் முடிவில் சித்தியவான்
மகா கணேச வித்யாசாலை ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று டத்தோ ஙே கூ ஹாம் கிண்ணத்தை கைப்பற்றிய நிலையில் சுங்கை வாங்கித் தோட்டத் தமிழ்ப்பள்ளி இரண்டாம் இடத்தையும், ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளி மூன்றாம் இடத்தையும் வென்று கோப்பைகளையும் பதக்கங்களையும் வென்றன.
வெற்றியாளர்களுக்கு டத்தோ ஙே கூ ஹாம் கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் நற்சான்றிதழ்களை வழங்கி கௌரவித்ததுடன், மாநிலம் மற்றும் சர்வதேச அரங்குகளிலும் மஞ்சோங் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து சாதிக்க வேண்டும் என்று வாழ்த்துத் தெரிவித்ததோடு இந்நிகழ்ச்சிக்கு தம்முடைய சார்பில் 5,000 ரிங்கிட் மானியம் வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

