தமிழ் தலைமுறைகளைத் தழைக்கச் செய்யும் செந்தமிழ் விழா! மொழிப்பற்றை விதைக்கும் விழாவாக திகழ்கிறது டத்தோ சிவநேசன்

மஞ்சோங், ஜூன் 28 –

தமிழ்மொழியின் பெருமை, இலக்கியச் செழுமை மற்றும் பண்பாட்டு அடையாளத்தை இளம் தலைமுறையினரிடம் ஆழமாகப் பதியச் செய்வதில் செந்தமிழ் விழாக்கள் முக்கிய பங்காற்றுகின்றன என்று சுங்காய் சட்டமன்ற உறுப்பினரும், பேராக் மாநில சுகாதாரம், மனிதவளம், ஒற்றுமை மற்றும் இந்தியர் நலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினருமான டத்தோ சிவநேசன் அச்சலிங்கம் தெரிவித்தார்.

பேராக் மாநில தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் கழகத்தின் பேராதரவோடு, மஞ்சோங் மாவட்டத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழகமும், இடைநிலைப்பள்ளி தமிழாசிரியர் கழகமும் இணைந்து நடத்திய 26-ஆவது செந்தமிழ் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பேசிய அவர், தமிழின் செம்மையைப் பாதுகாப்பதும், அடுத்த தலைமுறைக்கு அதன் பெருமையை எடுத்துச் செல்வதும் ஒவ்வொரு தமிழரின் பொறுப்பு என்றார்.

தமிழ் வளர்ச்சிக்கான அனைத்து முயற்சிகளுக்கும் பேராக் மாநில அரசு தொடர்ந்து ஆதரவளித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இவ்வாண்டு செந்தமிழ் விழாவிற்காக 24,000 ரிங்கிட் நிதி வழங்கப்பட்டதையும், மேலும், ஜூலை மாதம் நடைபெறவுள்ள தேசிய அளவிலான செந்தமிழ் விழா போட்டிக்காக மத்திய கல்வி அமைச்சின் மூலம் 1 லட்சத்து 60 ஆயிரம் ரிங்கிட்டும், மாநில அரசின் சார்பில் 50 ஆயிரம் ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், போட்டியாளர்களுக்கான தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக, இவ்விழாவில் உரை நிகழ்த்திய மஞ்சோங் மாவட்டத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழகத் தலைவர் சுப்பிரமணியம் ரெங்கசாமி கூறுகையில், பேராக் மாநிலத்தின் 12 மாவட்டங்களிலிருந்து ஆரம்ப மற்றும் இடைநிலைப்பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 148 மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தங்களின் திறமைகளை வெகு சிறப்பாக வெளிப்படுத்தியதாகக் கூறினார்.

வெற்றி பெற்றவர்கள் ஜூலை மாதம் தைப்பிங்கில் நடைபெறவுள்ள தேசிய செந்தமிழ் விழாவில் பேராக் மாநிலத்தின் சார்பில் பங்கேற்கவுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

போட்டிகளில் ஆரம்பப்பள்ளி பிரிவில் லாருட் மாத்தாங், செலாமா மாவட்டமும், இடைநிலைப்பள்ளி பிரிவில் மஞ்சோங் மாவட்டமும் முதலிடம் பெற்று சுழற்கிண்ணங்களையும், கோப்பைகளையும் வென்றன. விழாவில் கல்வித்துறை அதிகாரிகள், தலைமையாசிரியர்கள் மற்றும் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு விழாவை மேலும் சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles