
கோலாலம்பூர், ஜூன் 30-
குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டபடி, கொள்ளைச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது என்பதை அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது என்று நீதிமன்றம் கண்டறிகிறது.
மேலும், அந்தக் கொள்ளை குழுவாகச் செயல்பட்ட நபர்களால் மேற்கொள்ளப்பட்டதோடு, அதில் அரிவாள் (பராங்) பயன்படுத்தப்பட்டதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனினும், இவ்விரு அம்சங்களை மட்டும் நிரூபிப்பது போதுமானதல்ல. குறித்த கொள்ளையைச் செய்தவர்களில் இந்த இரண்டு குற்றஞ்சாட்டப்பட்டவர்களும் (OKT) அடங்குவதாக அரசுத் தரப்பு மேலும் நிரூபிக்க வேண்டிய பொறுப்பு உடையதாகும் என்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி மஸுலியானா பிந்தி அப்துல் ரஷிட் தமது தீர்ப்பில் சுட்டிக் காட்டினார்.
இந்த விவகாரத்தை ஆராயும் போது, சாட்சிகளின் அடையாளம் காணும் சாட்சியம், அடையாள அணிவகுப்பு (Identity Parade) முடிவுகள், CCTV காட்சிப்பதிவுகள், கைது செய்யப்பட்ட விதம், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், 1950ஆம் ஆண்டின் சாட்சியச் சட்டம் பிரிவு 27-இன் கீழ் கிடைத்த கண்டுபிடிப்புகள், சாட்சிகள் மற்றும் விசாரணை அதிகாரியின் வாக்குமூலங்கள் உள்ளிட்ட அனைத்து சாட்சியங்களையும் நீதிமன்றம் முழுமையாக பரிசீலித்தது.
இந்த ஒவ்வொரு வகைச் சாட்சியங்களுக்கும் தனித்தனியான சான்று மதிப்பு இருப்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது.
இருப்பினும், அவை அனைத்தையும் ஒருங்கிணைத்து மதிப்பீடு செய்தபோது, இந்த இரண்டு குற்றஞ்சாட்டப்பட்டவர்களையும் குற்றத்துடன் உறுதியாக இணைக்கும் முழுமையான மற்றும் இடைவெளியற்ற சான்றுச் சங்கிலி உருவாகவில்லை என்று நீதிமன்றம் கண்டறிகிறது.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சமர்ப்பிக்கப்பட்ட மொத்த சாட்சியங்களின் அடிப்படையில், இந்த இரண்டு குற்றஞ்சாட்டப்பட்டவர்களே அந்தக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என்று நீதிமன்றம் உறுதியாக முடிவு செய்ய முடியவில்லை.
மேலும், இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்கும் முழுப் பொறுப்பும் அரசுத் தரப்பின் மீதே இருப்பதை நீதிமன்றம் நினைவில் கொண்டுள்ளது.
அரசுத் தரப்பின் முழு வழக்கையும் அதிகபட்சமாக மதிப்பீடு செய்த பின்னர், இந்த இரண்டு குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கும் எதிராக Prima Facie வழக்கை அரசுத் தரப்பு நிரூபிக்கத் தவறியுள்ளது என்று நீதிமன்றம் தீர்மானிக்கிறது.
அரசுத் தரப்பு வழக்கு முடிவில், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மௌனமாக இருந்தால்கூட அவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்க நீதிமன்றம் தயாராக இருக்காது என்பதில் நீதிமன்றம் திருப்தி அடைகிறது.
எனவே, அரசுத் தரப்பு இந்த இரண்டு குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கும் எதிராக Prima Facie வழக்கை நிரூபிக்கத் தவறியுள்ளது என்று நீதிமன்றம் தீர்மானிக்கிறது.
அதன்படி, குற்றவியல் நடைமுறைச் சட்டம் (Kanun Prosedur Jenayah) பிரிவு 180-இன் கீழ், இந்த இரண்டு குற்றஞ்சாட்டப்பட்டவர்களும் தங்களது தற்காப்பு விளக்கத்தை அளிக்க அழைக்கப்படாமல், விடுவிக்கப்பட்டு முழுமையாகக் குற்றமற்றவர்களாக விடுதலை செய்யப்படுகிறார்கள் என்று நீதிபதி: மஸுலியானா பிந்தி அப்துல் ரஷிட் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் (DPP): நூர் சயாஃபினா பிந்தி முகமட் ரட்ஸுவான் ஆஜரானார்.
எதிர்தரப்பு சார்பில்
டொனால்ட் செல்வம் சண்முகம் (OKT-2) மற்றும் ரெனலின் ரிவேரா ஆகியோர் ஆஜராகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

