
சுபாங் ஜெயா, டிசம்பர் 16- இவ்வாண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி சிலாங்கூர் 6,680 கோடி வெள்ளி மதிப்பிலான முதலீட்டைப் பதிவுசெய்துள்ளது.
இவ்வாண்டிற்கான முதலீட்டு இலக்கான 5,500 கோடி வெள்ளியை இந்த எண்ணிக்கைத் தாண்டி விட்டது.
முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிலியல் அமைச்சு வெளியிட்ட அறிக்கை, சிலாங்கூர் அதிக முதலீடு கொண்ட மாநிலம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் நாடு முழுவதும் 25,400 கோடி வெள்ளி மதிப்பிலான முதலீட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது நாட்டின் வரலாற்றில் மிக அதிக முதலீடாகும்.
அதே சமயம், 6,680 கோடி வெள்ளியுடன் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது.
கடந்த செப்டம்பர் இறுதி வரை நாங்கள் 5,500 கோடி வெள்ளி இலக்கைத் தாண்டிவிட்டோம் என்று அவர் சொன்னார்.
நேற்றிரவு இங்கு நடைபெற்ற சிலாங்கூர் மாநில நிலையிலான கிறிஸ்துமஸ் தின திறந்த இல்ல நிகழ்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார்

