
சென்னை: ஜன 8- “அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையில்,வேறு யாராவது குற்றவாளி இருப்பதாக தெரியவந்தால், அது யாராக இருந்தாலும் சரி அவர்கள் மீது தயவு தாட்சணியமின்றி காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும்.
இந்த வழக்கில் விரைந்து விசாரணை மேற்கொண்டு 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.
யார் அந்த சார்? என்ற கேள்விக்கு ஆதாரங்கள் இருந்தால், எதிர்க்கட்சிகள் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் கொடுக்கலாம்.
அதைவிடுத்து மலிவான செயலில் ஈடுபட வேண்டாம்,” என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாம் நாளான இன்று (ஜன.8) முதல் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறுகிறது.
இந்நிலையில், பேரவையில், அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசினார்.
“சென்னையில் ஒரு மாணவி மீது நடத்தப்பட்டிருக்கக்கூடிய பாலியல் வன்கொடுமை என்பது மாபெரும் கொடூரம்.
அதை யாராலும் நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுகுறித்து இந்த அவையில், ஜெகன் மூர்த்தி, வேல்முருகன், ஈஸ்வரன், சதன் திருமலைக்குமார், கே.மாரிமுத்து, நாகை மாலி, சிந்தனைச் செல்வன், எம்.ஆர்.காந்தி, ஜி.கே.மணி, செல்வப்பெருந்தகை, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கருத்துகளை பேசியிருக்கிறார்கள்.
இதுகுறித்து உண்மையான அக்கறையோடு பல உறுப்பினர்கள் பேசினர்.
இதை பயன்படுத்தி இந்த ஆட்சியின் மீது தவறான எண்ணத்தை உருவாக்கும் நோக்கத்தோடும் சில உறுப்பினர்கள் பேசியிருக்கிறார்கள்.
. யாருக்கு என்ன நோக்கம் இருந்தாலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கம் நின்று அவருக்கு சட்டப்படி நியாயத்தைப் பெற்றுத்தர வேண்டும் என்பதைத் தவிர தமிழக அரசுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை.
குற்றம் நடந்தபிறகு, ஒருவேளை குற்றவாளியை உடனடியாக கைது செய்யாமல் விட்டிருந்தால், அல்லது குற்றவாளியை காப்பாற்ற முடிவு செய்திருந்தாலோ, அரசை நீங்கள் குறை சொல்லாம்.
ஆனால் சில மணி நேரத்துக்குள் குற்றவாளியை கைது செய்த பிறகும், குற்றம் தொடர்புடைய ஆதாரங்களை எல்லாம் திரட்டிய பிறகும், அரசை குறை சொல்வது அரசியல் ஆதாயத்துக்கானதே தவிர, உண்மையான அக்கறையோடு செயல்படுவது இல்லை என்று அவர் சொன்னார்.

