
சென்னை: ஜன 16- தைப்பொங்கலுக்கு வாழ்த்து தெரிவிக்காமல் வட இந்திய பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த ஆளுநர் ரவிக்கு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் எந்த அரசு சார்ந்த நிகழ்ச்சியும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கும்.
தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிறைவடையும்.
ஆண்டுதோறும் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கூட இதுவே மரபாக இருந்து வருகிறது.
ஆனால் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆளுநர் உரையினை வாசிக்க வந்த ஆளுநர் ரவி, சட்டப்பேரவை கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்ற உப்புசப்பில்லாத காரணத்தை கூறி ஆளுநர் உரையை வாசிக்காமல் புறக்கணித்தார்.
ஆளுநரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனத்தை தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், நேற்று தமிழர் திருவிழாவான பொங்கலுக்கு வாழ்த்து தெரிவிக்காமல் வட இந்திய பண்டிகைகளுக்கு ஆளுநர் மாளிகை வாழ்த்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை செய்த நிலையில், தற்போது பொங்கல் வாழ்த்து தெரிவிக்காமல் இருப்பது தமிழ் மீதும் தமிழ் பாரம்பரியத்தின் மீதும் அவருக்கு இருக்கும் அவமரியாதையை வெளிப்படுத்தும் விதமாகவே அமைந்துள்ளதாக அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

