
ஷா ஆலம், ஜன. 17– இங்குள்ள செக்சன் 28, ஆலம் மேகா, ஸ்ரீ மகா முத்து
மாரியம்மன் ஆலயத்தில் பொங்கல் விழா நேற்று வெகு விமரிசையாக
நடைபெற்றது. கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ்
சம்புநாதன் இந்த விழாவில் சிறப்பு பிரமுகராக கலந்து சிறப்பித்தார்.
ஆலய நிர்வாகத்தின் ஆதரவுடன் கோத்தா கெமுனிங் தொகுதி இந்திய
சமூகத் தலைவர் கோபி முனியாண்டி சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் சுற்றுவட்டார பக்தர்கள் திரளாகக் கலந்து
கொண்டனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரகாஷ், இந்த பொங்கல் விழாவில் சுற்றுவட்டார மக்கள் திரளாகக் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கும்
வகையில் உள்ளது எனக் கூறினார். இத்தகைய நிகழ்வுகளில் கலந்து
கொள்வதன் மூலம் பக்தியை வளர்க்கும் அதேவேளையில் வட்டார மக்களிடையே அணுக்கமான நட்புறவையும் ஏற்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டார்.
மக்களின் நலனுக்காக மாநில அரசு பல்வேறு உதவித் திட்டங்களை அமல்படுத்தியுள்ளதாகக் கூறிய அவர், இத்திட்டங்கள் குறித்து பொது
மக்கள் குறிப்பாக இந்தியர்கள் அறிந்திருப்பது அவசியம் என்றார்.
மாநில அரசு நிலையிலும் தொகுதியிலும் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்த தகவல்களை எனது பேஸ்புக் பக்கத்தில் நான் வெளியிட்டு வருகிறேன். அப்பக்கத்தை வலம் வருவதன் மூலம் தங்களுக்கு
தேவையான உதவிகளை அடையாளம் கண்டு அவற்றை பெறுவதற்கான
முயற்சியில் அவர்கள் ஈடுபடலாம் என்றார் அவர்.
வசதி குறைந்த தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளி பேருந்துக் கட்டண
உதவித் திட்டத்தின் கீழ் மாநில அரசு ஆண்டுக்கு 300 வெள்ளி வழங்கி வருகிறது. அதே சமயம் உயர்கல்வி மாணவர்களுக்கு கல்விக் கட்டணமாக
3,000 முதல் 5,000 வெள்ளி வரை வழங்கப்படுகிறது. தனித்து வாழும் தாய்மார்கள் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு உதவும் வேளையில் ஐ-சீட்
திட்டத்தின் மூலம் வர்த்தக உபகரண உதவுயும் வழங்கப்படுகிறது என பிரகாஷ் குறிப்பிட்டார்.
இது தவிர மத்திய அரசின் மித்ரா திட்டத்தின் வாயிலாக
தொழில்முனைவோருக்கு கடனுதவியும் வழங்கப்படுகிறது. கல்வி,
பொருளாதாரம், சமூகவியல் உள்பட பல்வேறு துறைகளில் அரசாங்கம் அமல்படுத்தியுள்ள உதவித் திட்டங்கள் வாயிலாகப் பயன்பெற விரும்புவோர் தாராளமாக எனது அலுவலகத்தை நாடலாம் என அவர்
சொன்னார்.