
வாஷிங்டன்: ஜன 23- அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டிரம்ப் சட்டவிரோத குடியேற்றவாசிகளை வெளியேற்றுவது, பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை ரத்து என பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார்.
இந்த நிலையில், டிரம்ப் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது உக்ரைன் பிரச்னையில் ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு வரவில்லையென்றால் அந்த நாட்டின் மீது கூடுதல் பொருளாதார தடைகள் விதிக்குமா என்று அவரிடம் நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு அவர் பதிலளித்த டிரம்ப்,‘‘ உக்ரைன் பிரச்னையில் ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால் அந்த நாடு மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும்.
போர் ஒருபோதும் நடந்திருக்கக்கூடாது. உங்களுக்கு (அமெரிக்கா) திறமையான அதிபர் இருந்திருந்தால் போர் ஏற்பட்டிருக்காது.
நான் அதிபராக இருந்திருந்தால் உக்ரைனில் போர் நடந்திருக்காது.
ரஷ்யா ஒரு போதும் உக்ரைனுக்குள் நுழைந்திருக்காது.
புடினுடன் எனக்கு மிகவும் வலுவான புரிதல் இருந்தது. இதனால் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருக்காது.
அவர் மிகவும் புத்திசாலி. மேலும் மத்திய கிழக்கில் ஒரு போதும் பிரச்னை ஏற்பட்டிருக்காது.
அதிபர் புடினை சந்திக்க எப்போதும் தயாராக இருக்கிறேன்.
எப்போது வேண்டுமானாலும், அவரை நான் சந்திப்பேன். லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்படுகிறார்கள்.
இது ஒரு மோசமான சூழ்நிலை.
நிறைய பேர் கொல்லப்பட்டுள்ளனர், இடிப்பு நடவடிக்கையை போல் நகரங்கள் உடைந்து கிடக்கின்றன’’ என்றார்.
உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்கள் அனுப்புவீர்களா என்று கேட்டபோது,‘‘அது குறித்து ஆய்வு செய்வோம்.
புடினுடம் பேசுவோம்’’ என்றார்.