
பத்துகாஜா,ஜன22: இனம்,மதம்,மொழி கடந்து பண்டிகைக் காலங்கள் மலேசியர்களின் ஒற்றுமையையும் மகிழ்ச்சியையும் பிரதிபலிப்பது மலேசியர்களின் நனிச் சிறந்த பண்பாக திகழ்வதாக பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவக்குமார் குறிப்பிட்டார்.
மேலும்,பல்லின மக்களின் பண்பாடும் பண்டிகையும் மலேசியர்களின் தனித்துவ சிறப்பம்சமாகும் என்றும் அவர் பெருமிதம் கொண்டார்.
மலேசியாவில் கொண்டாடப்படும் ஒவ்வொரு பண்டிகையும் மதம்,இனம் சார்ந்து இல்லாமல் ஒட்டுமொத்த மலேசியர்களுக்கான பெருநாளாகவே அது கொண்டாடப்படுவது நாம் மலேசியராக இருப்பதில் அகம் மகிழ வேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.
கம்போங் பாப்பான் கிராமத்தில் கிராம மேம்பாட்டு நிர்வாகம் மற்றும் பத்துகாஜா நாடாளுமன்ற சேவை மையமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த சீனப்புத்தாண்டு கொண்டாட்ட விருந்தில் அவர் இதனை குறிப்பிட்டார்.
மேலும்,உலக
நாடுகளில் மலேசியா தனித்துவமாய் திகழ்வதற்கும் சுபிட்சமான சூழலில் தொடர்ந்து இலக்கை நோக்கி முன்னேறவும் நம்மிடையே வலுபெற்றிருக்கும் ஒற்றுமை,புரிந்துணர்வு,பண்பாடு,பாரம்பரியம் உட்பட மலேசியர்கள் என்னும் உயரிய சிந்தனையும் தான் பெரும் சான்றாக விளங்குவதாகவும் நினைவுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர் கம்போங் பாப்பான் கிராமத்தின் மேம்பாடும் வளர்ச்சியும் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் ஆக்கப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அதேவேளையில்,விருந்து நிகழ்ச்சி நடைபெற்ற பொது மண்டபம் குளிரூட்டி வசதியோடு பல்வேறு வசதிகளோடு உருமாற்றம் கண்டு அழகாக அமைந்திருப்பதாகவும்,இந்த உருமாற்றத்தை தாம் மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப செய்தும் கொடுத்திருப்பதாக கூறினார்.
மிகவும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து நிகழ்ச்சியில் இருவருக்கு மருத்துவ செலவினத்திற்கான காசோலையை வழங்கிய சிவக்குமார் அனைத்து சீன சமூகத்திற்கும் சீனப் புத்தாண்டு வாழ்த்தினையும் தெரிவித்து கொண்டார்.

