
ஈப்போ, ஜன.26: பேராக் மாநில தோட்டத் தொழிற்சங்கத்தினருக்கு தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் நிலைப்பாடு, ஊழியர் சேமநிதி வாரியம், மனிதவள இலாகவின் பங்கு தொடர்பான கருத்தரங்கு மிகவும் அவசியமாகும் என்று இக்கருத்தரங்கை தொடக்கிவைத்தபோது பேராக் மாநில மனிதவளம், சுகாதாரம், ஒற்றுமை ,இந்திய சமூகநலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.
இந்நாட்டில் 1954 ல் தோட்டத் தொழிலாளர்களின் சங்கம் தொடங்கப்பட்டு விட்டது.
ஆனால், 1955 ல் தொழிலாளர் பிரிட்டன் அரச கட்டளை( ஓடினன்) உருவானது என்று வரலாற்று பதிவுகள் கூறுகின்றன.
குறிப்பாக, பி.பி.நாராயணன் இந்த தோட்டத் தொழிற்சங்கத்தில் தலைவராக பல்லாண்டுகளாக நிர்வகித்து வந்துள்ளார் என்று அவர் குறிப்பிட்டார்.
அன்று தோட்டத் தொழிற்சங்கம் அதிக உறுப்பினர்களை கொண்ட பெரிய தொழிற்சங்கமாக திகழ்ந்து வந்துள்ளது. தற்போது தேசிய ஆசிரியர் தொழிற்சங்கம் மிகப் பெரிய தொழிற்சங்கமாக இருந்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
தோட்டத் தொழிற்சங்கம் அன்று நிறைய போராட்டங்களை சந்தித்து வந்துள்ளனர்.
பின்பு தோட்டத் துண்டாடல் பிரச்சினைகள் போன்ற பல சவால்களை எதிர்நோக்கினர். அதன் விளைவு தொழிற்சங்கத்தில் உறுப்பினர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வந்தது என்று அவர் தெரிவித்தார்.
தொழிற்சங்கத்தின் கிளைகள் ஒவ்வொரு தோட்டத்திலும் உருவாக்கப்பட்டது.
ஆனால், அந்த தொழிலாளர்களுக்கு அவர்களின் உரிமை மற்றும் நிலைப்பாடு குறித்து இதுபோன்ற கருத்தரங்குகள் நடத்தப்பட்டால் தெரிந்துக்கொள்ள முடியும்.
அதன் தொடர்பாக இம்முறை சேமநிதி வாரியம், மனிதவள இலாகா ஆகியோரின் அதிகாரிகள் கருத்தரங்கில் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக இவர்களை அணுகும் முறைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டதாக அவர் கருத்துரைத்தார்.
இக்கருத்தரங்கிற்கு பேராக் மாநில அரசு முழுமையான ஆதரவை பொருளாதார ரீதியில் வழங்குவதாக அவர் உறுதியளித்தார்
.இனிவரும் காலங்களில் மாநில அரசு தோட்டத்தொழிலாளர்களுடன் ஒன்றிணைந்து தொழிற்சங்கத்தை உருவாக்க முடியும் என்று அவர் நம்பிக்கையுடன் கூறினார்.

