
அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற அந்நாட்டு அதிபர் டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டார். இதையடுத்து ஆவணமின்றி அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டினர் விமானம் மூலம் திரும்ப அனுப்பப்பட்டு வருகிறார்கள்.
ராணுவ விமானங்களை பயன்படுத்தி கவுதமாலா, ஈகுவடார், பெரு, ஹோண்டுராஸ் நாடுகளுக்கு சட்டவிரோத குடியேறிகளை அமெரிக்கா அனுப்பி வருகிறது.
அவ்வகையில் கடந்த மாதம், கொலம்பியாவிற்கு அனுப்பப்பட்ட அந்நாட்டு மக்கள் ராணுவ விமானத்தில் ஏ.சி, தண்ணீர் எதுவும் இல்லாமல், கைவிலங்கிட்டு அனுப்பப்பட்டிருந்தனர். இதற்கு கொலம்பியா அரசு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க ராணுவ விமானத்தை அனுமதிக்க மறுத்தது.
இதன் காரணமாக கொலம்பியாவை சேர்ந்தவர்களுக்கான விசாக்களை ரத்து செய்ததுடன், அமெரிக்காவுக்கு அந்நாட்டு பயணிகள் வர தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்டார். இதற்கு பதிலடியாக கொலம்பியாவும், அமெரிக்க பொருட்கள் மீது வரி விதித்தது. பதிலுக்கு கொலம்பிய அரசு மீது அமெரிக்காவும் கடுமையாக வரி விதித்தது.
பின்னர் இரு நாட்டு அரசுகளும் சமாதானத்திற்கு வந்ததால் வரிவிதிப்பு நீக்கப்பட்டது. இறுதியாக தன் நாட்டு விமானத்தை அனுப்பி தனது மக்களை கொலம்பியா அரசு மீட்டது.
இதனையடுத்து அமெரிக்காவில் இருந்து முதற்கட்டமாக 104 இந்தியர்கள், அமெரிக்காவின் சி-17 ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அந்த விமானம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள குரு ராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று மதியம் தரையிறங்கியது.