
கோலாலம்பூர் பிப் 8-
இந்திய தொழில் முனைவோர் மற்றும் வணிகர்களுக்கு உதவும் வகையில் முதல் முறையாக
தெக்குன் கடனுதவி திட்டத்திற்கு அரசாங்கம் பத்து கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.
ஒதுக்கப்பட்ட பத்து கோடி வெள்ளி அறிவிப்பை தொடர்ந்து கடந்த 2 வாரத்தில் 143 இந்திய தொழில் வணிகர்களுக்கு 36 லட்சம் வெள்ளி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்று தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் இன்று தெரிவித்தார்.
இந்திய சமுதாயத்திற்காக இந்த ஆண்டு தெக்குன் ஸ்பூமி, ஸ்பூமி கோஸ் பிக் வாயிலாக 10 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டது.
கடந்த ஜனவரி 14ஆம் தேதி வெளியான அறிவிப்பை தொடர்ந்து இந்திய வணிகர்களிடையே இது அமோக வரவேற்பு கிடைத்தது.
அதிகமான இந்திய வணிகர்கள் இந்த தெக்குன் கடனுதவிக்கு விண்ணப்பம் செய்தனர்.
இதன் அடிப்படையில் இரண்டு வாரங்களில் மட்டும் 143 இந்திய வணிகர்களுக்கு 36 லட்சம் வெள்ளியை தெக்கும் வழங்கியுள்ளது என்று அவர் சொன்னார்.
இந்தத் தொகையில் ஸ்பூமி கோஸ் பிக் திட்டத்தின் கீழ் 14 தொழில்முனைவோருக்கு 5 லட்சத்து 55,000 வெள்ளி வழங்கப்பட்டது.
அதே வேளையில் ஸ்பூமி திட்டத்தின் கீழ் 129 தொழில்முனைவோருக்கு 3.061 மில்லியனும் வழங்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற ஸ்பூமி, ஸ்பூமி கோஸ் பிக் திட்டங்களின் கண்காணிப்புக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
100 மில்லியன் அதாவது பத்து கோடி வெள்ளி நிர்வகிக்கப்பட்ட, திட்டமிடப்பட்ட முறையில் பயன்படுத்தப்படுவதை நான் உறுதி செய்வேன்.
எனவே, விநியோக முறையை மேலும் வலுப்படுத்த ஒவ்வொரு மாதமும் நான் தனிப்பட்ட முறையில் ஒரு கண்காணிப்புக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவேன் என்று அவர் சொன்னார்.

