
இந்திய சினிமாவின் முன்னணி பாடகராக திகழ்ந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியன், கொரோனா காலக்கட்டத்தில் மரணமடைந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள,காம்தார் நகர் முதன்மை சாலைக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், இந்த பெயர் பலகையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்திய திரையிசை உலகில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடி கோடிக் கணக்கான ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். தமிழ் திரையிசையில் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி என பலமொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார். பாடகராக மட்டுமில்லாமல், திரைப்படங்களில் நடித்துள்ளார். 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
பன்முகத்திறமை கொண்டவராகத் திகழ்ந்த பாடகர் எஸ்.பி. பாலாசுப்ரமணியத்தின் குரல் என்பது மூன்று தலைமுறையின் குரல். அதனால்தான். அவர் 40 ஆண்டுகளுக்கு மேலாக அவர் மறையும் வரை பாடிக்கொண்டே இருந்தார். தமிழ் திரையிசை ரசிகர்களால் பாடும் நிலா பாலு என்று அன்புடன் அழைக்கப்பட்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் செப்டம்பர் 25, 2020-ல் காலமானார். எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவு ரசிகர்களை மீளாத்துயரில் ஆழ்த்தியது.
பாடகர் எஸ்.பி.பி மரணமடைந்து ஆண்டுகள் பல கடந்தாலும், அவருடைய அமுதக்குரலால் பாடப்பட்ட பாடல்கள் காற்றை இனிமையாக்கிக் கொண்டிருக்கிறது. இதனிடையே, பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நினைவைப் போற்றும் வகையில், சென்னையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம், காம்தார் நகர் முதல் தெருவிற்கு ‘எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை’ எனப் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவித்தார்.