

கோலாலம்பூர் மார்ச் 6-
தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு கொண்டாப்படும்
தைப்பூசத்தின் போது இந்துக்கள் வேல் வேல் என்று கூறுவதை பேய் பிடித்தவர்கள் அல்லது போதையில் உள்ளவர்களுடன் ஒப்பிட்டு பேசிய சர்ச்சைக்குரிய சமய போதகர் ஷம்ரி வினோத்திற்கு எதிராக இன்று மூன்று கட்சிகள் ஒன்றிணைந்து செந்தூல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தன.
பிபிபி விலாயா மாநில தலைவரும் இளைஞர் அணி தலைவருமான சத்யா சுதாகரன் தலைமையில் உரிமை கட்சியை சேர்ந்த சாய் சரவணன், மலேசிய இந்தியர் மக்கள் கட்சியைச் சேர்ந்த சுதன் ஆகியோர் இன்று காலையில் செந்தூல் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
பிபிபி கட்சியின் இளைஞர் அணி செயலாளர் ரூகேஸ், சிகாம்புட் பிபிபி இளைஞர் அணி தலைவர் டத்தோ வினோத், புக்கிட் பிந்தாங் பிபிபி இளைஞர் அணி தலைவர் நவின் முத்துசாமி ஆகியோரும் உடனிருந்தனர்.
ஷம்ரி வினோத்தின் இந்த செயல் இந்து மதத்தை மிகவும் அவமரியாதைக்குரியதாகவும் உள்ளது.
அரசாங்கத்தால் கடைப்பிடிக்கப்படும் 3ஆர் எனப்படும் இனம், மதம், அரச ஆட்சியாளர்கள் கொள்கைகளின் தெளிவான மீறலாகும்.
இதுபோன்ற எரிச்சலூட்டும் அறிக்கைகள் நமது நாட்டின் நல்லிணக்கத்தை அச்சுறுத்துகின்றன.
ஆகையால் இந்த விவகாரத்தில் யாரும் தப்பிக்கக்கூடாது என்று சத்யா சுதாகரன் தெரிவித்தார்.
ஷம்ரி வினோத் இந்து உட்பட பல மதங்களை பற்றி மோசமாக அதுவும் கீழ்த்தரமாக பேசுவது முதல் முறையல்ல.
அவருக்கு எதிராக பல போலிஸ் புகார்கள் ஏற்கெனவே செய்யப்பட்டுள்ளன.
ஆனால் இதுவரை அவருக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இப்போது இந்து சமயத்தை இழிவு படுத்தியிருக்கும் அவர் மீது போலீஸ் மற்றும் அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஷம்ரி வினோத்தின் வார்த்தைகள் இந்து நம்பிக்கை, அதன் கலாச்சாரம் பாரம்பரியத்திற்கு நேரடி அவமானமாகும்.
ஆகையால் அவர் மீது உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே காவடி நடனத்தை கேலி செய்த ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் ஏரா எஃப்.எம்.ஊழியர்கள் மன்னிப்பு கேட்டுக் கொண்டாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நேற்று முன்தினம் பிபிபி கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்திருந்தார்.
இப்போது ஷம்ரி வினோத் செயல் எல்லையை மீறியுள்ளது.
அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று டத்தோ டாக்டர் லோகபாலா வலியுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

