


காஜாங், மார்ச் 8-
இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சிலாங்கூர் மாநில பிபிபி மற்றும் சிலாங்கூர் மாநில பிபிபி மகளிர் அணி சார்பில் இலவச மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.
குடும்ப, தொழில்களுக்கு மத்தியில் பெண்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும் என்று
மைபிபிபி கட்சியின் சிலாங்கூர் மாநில தலைவர் டாக்டர் சுரேந்திரன் இந்த நிகழ்வில் வலியுறுத்தினார்.
இன்று உலகம் முழுவதும் உலக மகளிர் தினம் கொண்டாடப்படுவது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
இவ்வேளையில் உலக மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் அடிப்படையில் சிலாங்கூர் மாநில மைபிபிபி, தேசிய மகளிர் பிரிவு, மாநில மகளிர் பிரிவுடன் இணைந்து இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்ததாக அவர் சொன்னார்.
இன்று காலை முதல் கிட்டத்தட்ட 100 பேர் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர்.
பி40 பிரிவைச் சேர்ந்த மக்கள் இதில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
பெண்கள் பல்வேறு சுமைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
பெண்கள் தன்னை தானே செதுக்கி கொண்டு சுற்றத்தாரையும், சூழலையும் சீரமைத்து வருகின்றனர்.
அதே வேளையில் தொழில், வேலைக்கு செல்வது உட்பட பொருளாதார ரீதியிலும் அவர்கள் போராடி வருகின்றனர்.
இப்படி பல்வேறு பொறுப்புகளை கொண்டிருக்கும் பெண்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
உடல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே தங்களின் பொறுப்புகளை அவர்கள் நிறைவேற்ற முடியும்.
இதன் அடிப்படையில் தான் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது என்று டாக்டர் சுரேந்திரன் கூறினார்.
இந்நிகழ்வில் பிபிபி தேசிய மகளிர் பிரிவுத் தலைவர் எம். புனிதா, சிலாங்கூர் மாநில பிபிபி அணி தலைவி மெர்லின் டி குருஸ், தேசிய தகவல் பிரிவு துணைத் தலைவர் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்

