

பத்துகாஜா,மார்ச்10: இளைஞர்களை ஊக்குவிக்கவும் அவர்கள் நம்பிக்கையான வாழ்வில் பயணிக்கவும் சிலம்பம் போன்ற நமது பாரம்பரிய விளையாட்டுக்கள் பெரும் பங்காற்றுவதாக பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் குறிப்பிட்டார்.
சிலம்பம் நமது பாரம்பரிய விளையாட்டு மட்டுமில்லை.அது நமது பண்பாட்டையும் எடுத்துரைக்கும் சான்றாகும் என்றார்.
இளைஞர்களின் வளமான வாழ்விற்கும் நம்பிக்கையான எதிர்காலத்திற்கும் சிலம்பம் ஊன்றுக்கோள் எனவும் விவரித்த அவர் நமது அடையாளமாக உயிர்ப்பிக்கும் சிலம்பத்தை கற்றுத்தேர்வதற்கு இளைஞர்களிடையே ஆர்வம் மேலோங்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.
பத்துகாஜாவின் மலேசிய இளைஞர் மேம்பாட்டு அரங்கில் நடைபெற்ற சிலம்பம் தர நிர்ணயம் நிகழ்ச்சியில் உரையாற்றுகையில் சிவகுமார் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழர் பாரம்பரியமும் பண்பாடும் வாழ்வியலோடு தற்காப்பும் சார்ந்து இருப்பதால் அதனை கற்று தலைமுறை தலைமுறையாக இட்டுச் செல்ல நாம் அனைவரும் சிலம்பம் போன்ற நமது தற்காப்பு கலையில் பெரும் ஆர்வமும் முனைப்பும் கொள்ள வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.
அதேவேளையில் இளைஞர்களும் மாணவர்களும் இன்றைய நாளில் சிலம்பத்தில் ஆர்வமாய் பங்கெடுத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.
சிலம்ப பயிற்சியாளர்களின் கூற்றுப்படி நடப்பில் சிலம்பம் கற்க அதிகமானோர் முன்வருவதும் அந்த எண்ணிக்கை நாளும் அதிகரிப்பதும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறிய அவர் தொடர்ந்து இக்கலையில் நம் இளைஞர்கள் சரியான இலக்கில் பயணிக்க ஊக்குவிப்பதோடு பெரும் ஆதரவையும் தாம் வழங்குவேன் எனவும் அவர் மேலும் கூறினார்.