நோன்பு கஞ்சி வழங்குதல் மக்களிடையே நெருக்கத்தை ஏற்படுத்துகிறது – சிவகுமார் பெருமிதம்!!

பத்துகாஜா,மார்ச்11: ஒவ்வொரு ஆண்டும் ஹரிராயா பெருநாளுக்கு முன்னதாக முஸ்லிம்கள் மேற்கொள்ளும் நோன்பு நாளில் அவர்களுக்கு வழங்கப்படும் நோன்பு கஞ்சி நிகழ்ச்சிகள் வாயிலாக தனக்கும் உள்ளூர் மக்களுக்குமான அன்பும் நெருக்கமும் அதிகரிப்பதாக பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு வ.சிவகுமார் தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் இந்த நோன்பு கஞ்சி நிகழ்ச்சியின் போது மக்களிடையே ஒற்றுமையும் புரிந்துணர்வும் மேலோங்குவதையும் உணர முடிவதாக கூறிய சிவகுமார் முஸ்லிம்களின் பாரம்பரியத்தையும் அவர்களின் சமய பண்பாட்டையும் பேணி காத்திடவும் இச்செயல் நடவடிக்கை வழிவகுப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

பத்துகாஜா நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட ஶ்ரீ கந்தான்,கம்போங் கூர்னியா ஆகிய கிராம மேம்பாட்டு நிர்வாகம் பெட்ரோனாஸ் பல்கலைக்கழக மாணவர்களின் ஒத்துழைப்போடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நோன்பு கஞ்சி வழங்கும் நிகழ்வில் அவர் இதனை வலியுறுத்தினார்.

இந்நடவடிக்கை உள்ளூர் மக்களிடையே மட்டுமின்றி பல்கலைக்கழக மாணவர்களிடையிலும் நல்லதொரு சமூக உணர்வையும் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் விதைக்கும் ஒன்றாகவும் அமைந்திருப்பதை காண முடிவதாகவும் குறிப்பிட்ட அவர் நாட்டில் அன்பும்,சுபிட்சமும்,மதநல்லிணக்கமும் மேலோங்க நாம் அனைவரும் மலேசியர்கள் என்னும் உணர்வோடு இருத்தல் வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

மக்களிடையே ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் விதைக்கும் மலேசியர்களின் ஆரோக்கியமான உணர்விற்கும் சிந்தனைக்கும் ஒருசில அறிவிலிகள் தடையாக எதையாவது பேசினாலும்,நாம் அனைவரும் மலேசியர்கள் என்னும் பெருமிதமான அடையாளத்துடன் எல்லா மதங்களையும் அதுசார்ந்த நம்பிக்கைகளுக்கு மதிப்பளித்து மதநல்லிணக்கத்தோடு ஒற்றுமையாகவும் புரிந்துணர்வோடும் வாழ்தல் வேண்டும் எனவும் அவர் நினைவுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles