
மனித உரிமைகளுக்கு கொடூரமான முறையில் இயங்கி வரும் சொஸ்மா சட்டத்தை அரசாங்கம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் அல்லது மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதி ராவ் இன்று ஆணித்தரமாக வலியுறுத்தி உள்ளார்.
சொஸ்மாவில் கைது செய்யப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இன்று காலையில் அமைதியான முறையில் நாடாளுமன்ற முன் புறத்தில் கூடினர்.
சொஸ்மாவில் குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதால் அவர்களின் குடும்பங்கள் பரிதவிக்கிறது.
ஆகவே டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான புதிய அரசாங்கம் சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
இவர்கள் கொடுத்த மகஜரை பெற்றுக் கொண்ட கணபதி ராவ் இவர்களின் விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றார்.
நானும் இசா எனப் படும் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டவன். இதன் வலி என்ன என்பது எனக்கு நன்றாக தெரியும் என்றார் அவர்.

