130 ஆண்டுகள் வரலாற்றை கொண்ட இந்த ஆலயம் எவ்வாறு சட்ட விரோதமானதாக கருதப்படுகிறது? – ஜாலான் மஸ்ஜித் இந்தியா ஆலயத்திற்காக அனைவரும் ஒன்றிணைவோம்!

தலைநகர் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் அமைந்துள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் சட்ட விரோதமானது அல்ல, என பிபிபி (PPP) கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்துள்ளார்.

கம்பூங் அத்தாப்பில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், “130 ஆண்டுகள் வரலாற்றை கொண்ட இந்த ஆலயம் எவ்வாறு சட்ட விரோதமானதாக கருதப்படுகிறது?” என்ற கேள்வியை எழுப்பினார்.

“2006 ஆம் ஆண்டு, இவ்வாலயம் இடிக்கப்படவிருந்தது. ஆனால், அனைவரும் ஒன்றிணைந்து அதை பாதுகாத்து, 2008 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. எனவே, இந்த பிரச்சினையை அரசியல் கருவியாக பயன்படுத்தாமல், அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற ஒரு தீர்வை அரசாங்கம் வழங்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

தலைநகரின் மைய பகுதியில் அமைந்துள்ள இவ்வாலயம் உடைக்கப்படுமா என்ற அச்சம் இந்துக்களிடையே உருவாகியுள்ளது. இருப்பினும், “இந்த ஆலயத்தை இடிக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த பிரச்சனை தீர்க்கப்படும் வரை, ஆலயம் வழக்கம்போல் செயல்படும்,” என கோலாலம்பூர் மாநகர மன்றத்தின் (DBKL) டத்தோ பண்டார் உறுதியளித்துள்ளார்.

அதேபோல், “மடானி அரசாங்கத்தின் கீழ் எந்த ஆலயமும் இடிக்கப்படாது” என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதி அளித்திருப்பதை நினைவுபடுத்திய டத்தோ லோகபாலா, “இதன் அடிப்படையில், பிரதமர் இந்த ஆலயத்தை பாதுகாப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிபிபி கட்சியின் தேசிய ஆண்டு கூட்டம் விரைவில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. தேசிய முன்னணி தலைவர்களுடன் கலந்தாலோசித்த பின்னர், கூட்டத்திற்கான தேதிகள் அறிவிக்கப்படும்.

பிபிபி கட்சி சமூக சேவைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதையும், “வாரம் ஒரு முறை மக்களை நேரடியாக சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது,” என்பதையும் டத்தோ லோகபாலா குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles