
கிளந்தான் மாநிலத்தில் வரும் ஹரிராயா பெருநாளுக்கு வர்த்தகத் தளங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று மாநில அரசாங்கம் எடுத்துள்ள முடிவை முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராஹிம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்ட ரீதியாக எதிர்விளைவுகளைக் கருத்தில் கொள்ளாமலேயே கிளந்தான் மாநில அரசு, அவசர அவசரமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக கோத்தா பாரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக ஸைட் இப்ராஹிம் தெரிவித்தார்.
ஹரிராயா தினத்தன்று, சிறிது சம்பாதிக்க வேண்டும் என்று கருதும் வணிகர்கள் தங்கள் வர்த்தகத் தளங்களைத் திறக்கலாம். ஆனால், அவர்கள் கடைகளை அடைக்க வேண்டும் என்று உத்தரவிடப்படுவது மூலம் மாநில அரசுக்கு எதிராக வணிகர்கள் வழக்குத் தொடுக்க முடியும் என்று ஸைட் இப்ராஹிம் எச்சரித்தார்.
கடை உரிமத்திற்கான லைசென்ஸ் வழங்குவதற்கு கட்டணத்தை வசூலிக்கும் போது, இந்த நிபந்தனைகளை வணிகர்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தப்பட்டதா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
தெரியப்படுத்தப்படாத பட்சத்தில் மாநில அரசாங்கம் சட்ட ரீதியாக நடவடிக்கையை எதிர்கொள்ளும் அபாயம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.