934 சுங்கை பூலோ எஸ்.பி.எம். மாணவர்களுக்கு 318,900 ரிங்கிட் கல்வி ஊக்கத்தொகை! 10,000 இலவச சைக்கிள்கள் வழங்க அமைச்சர் ரமணன் அதிரடி அறிவிப்பு

சுங்கை பூலோ, மே 9 –
சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சிறந்த முடிவுகளைப் பெற்ற 934 மாணவர்களுக்கு மொத்தம் 318,900 ரிங்கிட் மதிப்பிலான கல்வி ஊக்கத்தொகையை மனிதவள அமைச்சரும், தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இன்று வழங்கினார். 

அதே வேளையில், சுங்கை பூலோ மக்களின் உள்ளூர் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் 10,000 இலவச சைக்கிள்கள் வழங்கப்படும் என்ற வியப்பூட்டும் அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். 

இன்று இங்கு நடைபெற்ற ‘சிறந்த எஸ்.பி.எம். மாணவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கும் விழாவில்’ உரையாற்றிய அவர், இந்த சைக்கிள்கள் வழங்கும் திட்டம் குறித்து முன்னரே திட்டமிடவில்லை என்றும், உள்ளூர் மக்களின் பயணத் தேவைகளைக் கருத்தில் கொண்டு இந்த உடனடி முடிவை எடுத்ததாகவும் குறிப்பிட்டார். 

“சுங்கை பூலோவில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் தங்கள் வசிப்பிடங்களுக்குள்ளேயே குறுகிய தூரங்களுக்குப் பயணம் செய்வதை நான் காண்கிறேன். குறிப்பாக குபு காஜா மற்றும் சுபாங் பெர்டானா போன்ற பகுதிகளில் இருப்பவர்கள் தங்கள் பகுதிகளுக்குள்ளேயே அதிகம் நடமாடுகிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் இந்த 10,000 இலவச சைக்கிள்கள் வழங்கப்படும்,” என்று அவர் கூறினார். 

செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இதற்கான முன்பதிவுகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் மூன்று மாதங்களுக்குள் இந்த சைக்கிள்கள் விநியோகிக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். 

கல்வி உதவி குறித்து விளக்கிய ரமணன், கடந்த ஆண்டு 7ஏ மற்றும் அதற்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட இந்த நிதி உதவி, இந்த ஆண்டு 4ஏ மற்றும் அதற்கு மேல் பெற்ற மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்றார். இதன் மூலம் அதிகப்படியான மாணவர்கள் தங்களின் கடின உழைப்பிற்கு உரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். 

மாணவர்களிடையே உரையாற்றிய அவர், வெறும் கல்வி சார்ந்து மட்டும் இயங்காமல், தொழிற்கல்வி (திவெட்) மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) போன்ற எதிர்காலத் தொழில்நுட்பத் துறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் ADTEC பயிற்சி மையத்தில் பயிலும் மாணவர்களுக்கு 95.5% வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார். 

மேலும், தனது தொகுதி மேம்பாட்டுப் பதிவுகளைப் பகிர்ந்து கொண்ட அவர், சுங்கை பூலோவில் கல்வி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இதுவரை 2.9 மில்லியன் நிதியைச் செலவிட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதில் பள்ளிகளின் வசதிகளை மேம்படுத்த 1.69 மில்லியனும், பல்வேறு கல்வி உதவிகளுக்காக 4,000-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களுக்கு 1.2 மில்லியனும் வழங்கப்பட்டுள்ளது. 

இளைய தலைமுறையினர் கல்வியில் சிறந்து விளங்குவதோடு மட்டுமல்லாமல், தங்களின் குடும்பத்தையும் நாட்டையும் அடுத்த நிலைக்கு உயர்த்தும் வலிமை மிக்கவர்களாக உருவாக வேண்டும் என்பதே தனது நோக்கம் என்று அமைச்சர் ரமணன் தனது உரையில் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles