

கிள்ளான், ஏப்ரல் 7-
கிள்ளான் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் ஏற்பாட்டில் நடைபெற்ற அனைத்துலக மாஸ்டர் கால்பந்து போட்டியில் இத்தாலி சாம்பியன் கிண்ணத்தை தட்டிச் சென்றது.
நேற்று கிள்ளான் கோத்தா ராஜா அரங்கில் நடைபெற்ற அனைத்துலக மாஸ்டர் கால்பந்து போட்டியில் மலேசியா, சிங்கப்பூர், இந்தியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, பிரிட்டன், இத்தாலி மற்றும் நோர்வே நாடுகள் கலந்து கொண்டன.
இரண்டு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் முதல் இடங்களை இத்தாலி மற்றும் பிரிட்டன் பிடித்தன. இவ்விரு குழுக்களும் நேரடியாக அனைத்து உலக மாஸ்டர் கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றன.

இதில் இத்தாலி வெற்றி பெற்று அனைத்து மாஸ்டர் கிண்ணத்தை தட்டிச் சென்ற வேளையில் பிரிட்டன் இரண்டாவது இடத்தை பிடித்தது.
குழு ரீதியில் இரண்டாவது இடத்தைப் பிடித்த மலேசியா மற்றும் சிங்கப்பூர் PLATE CUP போட்டிக்கு தகுதி பெற்றன. இதில் மலேசியா வெற்றி பெற்று பிளே காப் கிண்ணத்தை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியில் வெற்றி பெற்ற குழுக்களுக்கு முக்கிய பிரமுகர்கள் பரிசுகளை எடுத்து வழங்கி சிறப்பித்தனர்.

இதனிடையே நள்ளிரவு நேரத்தில் கிள்ளான் பிரிமியர் ஹோட்டலில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் அனைத்து குழு கேப்டன் களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் மூத்த மலேசிய நட்சத்திர கால்பந்து வீரர்களான டத்தோ தனபாலன், கே.குணாளன், சோமசுந்தரம், ஏஎஸ்பி இராஜன் உட்பட பலரும் சிறப்பு செய்யப்பட்டனர்.
சிறப்பு வருகை புரிந்த செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ், புக்கிட் கியாரா மண்ணின் மைந்தர் யாங் பெர்பஹியா டாக்டர் மனோ பரமசிவம், டத்தோ இராமன், சிலாங்கூர் காற்பந்து சங்கத்தின் உதவித் தலைவர் டத்தோ சுகுமாறன் ஆகியோருக்கு கிள்ளான் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் தலைவர் பாலகிருஷ்ணன், போட்டி ஏற்பாட்டுக் குழு தலைவர் டாக்டர் ஜி.கே.சாம்பசிவம், கிள்ளான் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் பொருளாளர் சங்கர் ஆகியோர் சிறப்பு செய்தனர்
வரும் 2026 ஆம் ஆண்டில் அனைத்துலக மாஸ்டர் கால்பந்து போட்டியை தென்னாப்பிரிக்கா ஏற்று நடத்துகிறது. கிள்ளான் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் அனைத்துலக மாஸ்டர் கால்பந்து போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்ததை அனைவரும் வெகுவாக பாராட்டினர்.

