இந்தியர்களுக்காக கோலகுபு பாருவில் 17 லட்சம் வெள்ளி செலவில் மின் சுடலை! நிர்வாணா குழுமம் நிர்மாணிக்கிறது…

ஷா ஆலம், ஏப். 10- உலு சிலாங்கூரிலுள்ள இந்துக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மின் சுடலையை அமைப்பதற்கான திட்டத்தை மாநில அரசு இறுதி செய்துள்ளது.

சுமார் 17 லட்சம் வெள்ளி செலவிலான இந்த மின்சுடலையை கோல குபு பாருவில் அமைப்பதற்கு நிர்வாணா குழுமம் இணைக்கம் தெரிவித்துள்ள தாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் அரசியல் செயலாளர் சைபுடின் ஷாபி முகமது கூறினார்.

இன்று காலை நான் நிர்வாணா மலேசியா குழுமத்தின் துணைத் தலைவருடன் சந்திப்பு நடத்தினேன்.

அந்த சந்திப்பில் கோல குபு பாருவில் இந்துக்களுக்காக மின்சுடலை அமைப்பதற்கு இணக்கம் காணப்பட்டது என்று அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவொன்றில் தெரிவித்தார்.

கோலகுபு பாரு, ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய நிர்வாகத்தின் விண்ணப்பத்தின் பேரில் முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்திற்கு உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் முழு ஒத்துழைப்பு கிடைத்துள்ளது.

இந்த திட்டப் பணிகளை உலு சிலாங்கூர் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் மேற்பார்வையிடுவார் என அவர் மேலும் சொன்னார்.

சிலாங்கூர் மந்திரி பெசாரின் அரசியல் செயலாளர் என்ற முறையில் நான் சொந்தமாக களமிறங்கி இப்பகுதியில் உள்ள இந்துக்களின் தேவையை பூர்த்தி செய்துள்ளேன்.

17 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான இந்த சமூகத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நிர்வாணா நிறுவனம் முன்வந்துள்ளது. இது வெறும் கட்டிடம் சம்பந்தப்பட்ட மேம்பாடு கிடையாது.

மாறாக, அங்கீகாரத்தின் அடையாளமாகவும் எதிர்பார்ப்புகளுடன் இத்தனை நாட்கள் காத்திருந்த மக்களின் குரலுக்கு வழங்கப்பட்ட மரியாதையாகவும் விளங்குகிறது.

இதுதான் எங்களின் அணுகுமுறை. வெறும் முழக்கமல்ல, வெறும் வார்த்தை ஜாலமல்ல, நாங்கள் பணிகளை முன்னிறுத்துகிறோம். செயல்களின் வழி நிரூபிக்கிறோம்.

மக்களின் ஆதரவைப் பெறுவது, உண்மையான பலன்களைத் தருவதன் மூலமே தவிர இனிப்பான வார்த்தைகளால் அல்ல என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

மக்களுக்கான திட்டங்களை வெற்றியடையச் செய்வதில் பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்பு ஒற்றுமைக்கான பலமாக விளங்குவதை இது நிரூபிக்கிறது என அவர் அந்த பதிவில் குறிப்பிட்டார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles